ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய இந்திய இளைஞர் உயிரிழப்பு: கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டதாக தகவல்
ரஷ்ய – உக்ரெய்ன் போர் முடிவிலியாகத் தொடர்ந்துவரும் நிலையில், உக்ரெய்னுக்கு எதிரா ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வந்த இந்தியா, ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான ரவி மௌன் உயிரிழந்துள்ளார்.
ஹரியானா மாநிலம், கைதால் மாவட்டத்திலுள்ள மாதௌர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, போக்குவரத்துப் பணியில் சேருவதற்காக கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார்.
போக்குவரத்து பணிக்குச் சென்ற இவர் வலுக்கட்டாயமாக இராணுவப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.
ரவி குறித்து எந்தத் தகவலும் இல்லாத காரணத்தினால் அவரது குடும்பத்தினர் கடந்த 21ஆம் திகதி மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர்.
இந்நிலையில், ரவி மௌன் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது உடலைக் கண்டறிந்து உறுதிப்படுத்த உறவினர்களின் இரத்த மாதிரி பரிசோதனை அறிக்கையை அனுப்புமாறும் தூதரகம் பதிலளித்துள்ளது.
இதுதொடர்பில் ரவி மௌனின் சகோதரர் கூறுகையில், “உக்ரெய்னுக்கு எதிராக போரிட வேண்டும். இல்லையென்றால் 10 வருடங்கள் சிறை தண்டனை அனுபக்க வேண்டுமென ரஷ்ய இராணுவம் எனது சகோதரரை கட்டாயப்படுத்தியது.
முதலில் போர் இடம்பெற்று வந்த பகுதியில் வீரர்கள் பதுங்கும் சுரங்கங்கள் தோண்டும் பணியை செய்து வந்தார். அதன் பின்னர் நேரடியாக போர் நடவடிக்கைககளில் ஈடுபடுத்தப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் வரையில் நாங்கள் அவருடன் தொடர்பில் இருந்தோம். அப்போதும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்றுதான் அவரை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தோம். தற்சமயம் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. எனவே இப் பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உதவ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் இந்த போரில் வலுக்கட்டாயமாக பல இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் இதுகுறித்து வினவியபோது, விரைவில் ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றறப்படுவதாக உறுதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.