எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் புதிய ஆயுதம் இந்தியாவில் வெற்றிகரமாக சோதனை
இந்திய மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியப் பாதுகாப்பைப் பொறுத்தவரை மிகப்பெரும் வெற்றியாகும்.
மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளன. இது இந்திய இராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.
1990 இறுதியில் இந்தியாவை விடப் பாகிஸ்தானிடம்தான் அதிகளவில் ஏவுகணைகள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் பல நாடுகள் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததே இதற்குக் காரணம். அப்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்கின.
அந்த ஏவுகணைகள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் Interceptor missile கள் இந்தியாவுக்குக் கட்டாயம் தேவைப்பட்டன. இதற்காகச் சிறப்புத் திட்டமும் உருவாக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதைத் தொடங்கி வைத்தார். அவ்வாறுதான் இந்தியாவில் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உருவானது.
ஒவ்வொரு நாடும் அவர்களின் வான்வெளியை எதிரி நாட்டு விமானம், ஏவுகணை, டிரோன் ஆகியவற்றிடமிருந்து பாதுகாக்க ‘எயார் டிபன்ஸ் சிஸ்டம்’ எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதுண்டு.
இந்தியாவும் இதுபோல பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வலுவாக வைத்திருக்கிறது. எதிரிகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை எவ்வளவு தொலைவில் இடைமறித்து அழிக்க முடிகிறது என்பதைப் பொறுத்து இதில் பல வகைகள் இருக்கின்றன. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது முதல் கட்டத்தில் 2000 கி.மீ தொலைவு வரை எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.
இவை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் மூலம் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இருந்து இந்தியாவைத் தாக்குவதற்காக ஏவுகணை அனுப்பப்பட்டால் இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இந்தியாவைக் காக்கும். இப்போது சுமார் 5000 கி.மீ தொலைவில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா இப்போது சோதித்து இருக்கிறது.