கவிதைகள்

“மரணமும், நெருப்பாக ஒளிரும் புத்தர்களும்” …. கவிதை… வித்யாசாகர்.

மரணம் நெருப்பைப்போல கனல்கிறது
தொட்டதும் நம்மை நெருப்பாக்கிக் கொள்கிறது
நெருப்பானதும் சுடுவதும், நெருப்பானதும் ஒளிர்வதும்
வாழ்ந்துகொண்டிருக்கையில் வரும் வாய்ப்பு;

ஒவ்வொரு விதைகளும் மரமாகிறது
ஒவ்வொரு மரத்திலும் புத்தர்கள் அமர்வதில்லை
அமர்ந்தவர் அறிவுபெற்றதும் பெறாததுமெல்லாம்
நெருப்பிற்கு தெரியாது, மரணம் எதையும் அறியாது;

மரணம் நம் கண்முன்னே தான் எப்போதும்
வானத்தைப்போல நட்சத்திரங்களைப்போல
மறைவில் நின்று ஒளிகூடி சொலிக்கிறது
ஓங்கி ஓங்கி மேளச் சத்தமாக, சிலரின் அழுகையாக ஒலிக்கிறது;

மேளச்சத்தமோ அழுகையோ கூட பேரறிவின் மொழிகள்தான்
டும் டும் டும் எனும்போதெல்லாம் உள்ளேயோரு
ஞானக்கூத்தாட்டம் போடும், அழுகுரல் எச்சரிக்கை விடும்
நாம் தான் ஏதுமே அறியாமல் ஆடித் தொலைக்கிறோம்;

மொத்தத்தில்; ஆடுவதும் பாடுவதும்
இசைவதும் இசைப்பதும்தான் வாழ்க்கையெனில்,
மரணம் புரிந்து அது பிறரைச் சுட்டுவிடாமல்
எல்லோர்க்குள்ளும் ஒளிர்வதற்கென வாழ்வதும் பெரிதொரு கனவுதான்;

அதுபோல, ஒரு சிட்டுக்குருவி கத்தும் சத்தமோ
எங்கோ தூரத்தில் கேட்கும் பால்மணிச் சத்தம் தரும் பயமோ
மாலைகள் தெருவில் தூவி கிடக்கும் அழகோ
வாழும்போதே நம்மைச் சிந்திக்கத்தூண்டும் எனில்;

மரணமும் இனிக்கும் மிட்டாயின் நினைவாகவும்
ஒளிரும் விளக்கின் தீநாக்கின் ஆடலாகவும்
மீண்டும் மீண்டும் அழிவின்றி கால் தொடும்
கடலலையின் ஈரமாகவும் கண்ணெதிரே நிலைத்திருக்கும்;

ஆனால் ஒன்றைச் சொல்லவா ?

கண்ணெதிரே மரணம் தெரிவதென்பது
ஒரு பெண் மலர்வதைப்போல
மலர்கள் பூக்க, பின் காய்க்க, பழுக்க, பின் இனிப்பதைப்போல
வாழ்வினொரு சுவையான ரகசியம்தான்; மரணம்!

வாருங்கள், மரணத்தை இனி பயமின்றி தரிசிப்போம்,
அதற்குமுன், ஆண்டு நூறையேனும்
தேடித் தேடி மகிழ்வோடு வாழ்ந்து தீர்ப்போம்;
வாழ்க்கை வாழ்வதற்கே!! வாழ்க்கை அழகானதே!!

வித்யாசாகர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.