நீ என் தாரமே… கவிதை…. கண்மணிமா
ஐந்து மணி அலாரத்தை
அடிப்பதற்குள் நிறுத்திவிட்டு
அவசரமாய் எழுந்து சுடுநீர் போட்டு
உணவுக்கு உலை வைத்து
உறங்கி கொண்டிருப்பதாய் நினைத்து
எனை தேநீர் கோப்பையுடன்
தேவதையாய் வந்தெழுப்பும் உன்
குணத்தை எண்ணுகையில்
தேகம் சிலிர்க்குதடி பெண்ணே…
குழந்தைகளை செல்லமாய் எழுப்பி
காலை கடன்களை முடிக்க
கச்சிதமாய் சத்தமிட்டு
உத்தரவு போடும் உன்
உபசரணை தோரனையில் என்
உயரதிகாரி உத்தியோகம்
தோற்குதடி கண்ணே…
உதவிக்கு உன் பக்கம் வந்தால்
உதறித்தள்ளுவாய்.. ‘குழந்தைகள்
உதவிக்கு அனுமதியில்லை’ என்று
அழகாய் நீ கூறும் வார்த்தைக்குள்
நான் அடைக்களமாகிறேனடி அழகியே…
மூன்று குழந்தைகளையும்
முகம் சுளிக்காமல் தயார்படுத்தி
முச்சக்கரவண்டியில் ஏற்றிவிட்டு
எனை உணவருந்தும்படி கூறிக்கொண்டே
எனதருகில் நின்று பரிமாறும்
உன் அனுசரணை எண்ணி
அழத்தோணுதடி என் அகிலமே…
சிறிது நேரத்தில் நான் வெளியேற
வாசல் மறையும் வரை கையசைக்கிறாய்..
உன் வாசம் மட்டும் மறையவே இல்லை
மீண்டும் நம் வாசல் திரும்பும் வரை..
என் ஒவ்வொரு நொடியும் உன்
அன்பின் ஸ்பரிசங்களாலேயே
அர்த்தப்படுகிறது என் ஆருயிரே….
அடுத்த அரைமணி நேரத்தில்
அறைகளை சுத்தம் செய்து
அடுத்த வீட்டில் தகவல் சொல்லி தன்
கால்களை ஆயுதமாக்கி
வேலைத்தளம் நோக்கி பயணிக்கும்
உன் பக்குவத்தை நினைத்தால் என்
சிரம் பணிகிறதடி உன் பாதங்களில்
என் தாரமே….