கவிதைகள்
அவள் தாயானாள்… கவிதை… முல்லைஅமுதன்
மழையில் நனறாக நனைந்து
வந்தவனை ஆதுரத்துடன் அணைத்துத்
துடைத்து,
தேநீரும் தந்தாள்.
உஸ்ணம் பறந்தது.
காய்ச்சல் வந்தால்
பக்கத்துவீட்டு வசு அக்கா
ஊசி போட்டாள்.வலித்தது.
வசு அக்காவை செல்லமாக பேசிக்கொண்டே
அம்மா வெந்நீர் ஒத்தடம் கொடுத்தாள்.
வசு அக்கா மறந்து போய் அம்மா நர்ஸம்மாவானாள்.
பின்னர்,
மழையில் நனைந்ததால்
காய்ச்சலில் விழுந்த என்னை
அன்போடு அணைத்தாள் மனைவி.
காய்ச்சல் குறைந்ததது.
அவள் தாயானாள்.
இப்போதெல்லாம்…
வெளியிலிருந்து வருபவனை
மகள்களும்,பெயர்த்திகளும் அணைத்தும்,
முத்தங்கள் தந்தும் அம்மாவை ஞாபகமூட்டுகிறார்கள்.
காமமும் அன்பினாலானது.
முல்லைஅமுதன்