பூவுலகில் காதல் புனிதமே!…. கவிதை…. ஜெயராமசர்மா
மண்ணிலே நல்ல வண்ணம்
வாழவே வேண்டு மாயின்
உண்மையில் காதல் தானே
உயிராக இருக்கு தன்றோ
எண்ணிடும் போதே நெஞ்சில்
இன்பமே ஊற் றெடுக்க
பண் ணிடும் பாங்கை
காதல் பண்புடன் தருகுதன்றோ
உண்ணிடும் சோறு கூட
உடலுடன் சேர வேண்டில்
கண்ணிலே காதல் வந்தால்
கஷ்டமே கழன்றே போகும்
பழம் இனிது பாலினிது
பசித்தவர்க்கு உண வினிது
உள மினிக்க செய்வதற்கு
ஊக்கமது காதல் அன்றோ
தொட்டவுடன் முகம் சிவக்கும்
தூங்காது மனம் இருக்கும்
வட்ட நிலா ஓடிவரும்
வகைவகையாய் கனவு வரும்
கஷ்டமெலாம் போனது போல்
கனமின்றி உணர் விருக்கும்
காதலது இனி தென்று
கருத்தெல்லாம் நிறைந் திருக்கும்
மத்தாலே கடைந் தெடுத்த
வாச மொடு மோரிருக்கும்
வாசலிலே பழம் பழுத்து
வாழை மரம் நின்றிருக்கும்
அம்மாவின் கை பட்ட
அருஞ்சமையல் அரு கிருக்கும்
ஆனாலும் மன மெல்லாம்
அவை நினைவில் நிற்காது
காதலே இனி தென்று
கற்பனையாய் சொல்ல வில்லை
காதலே இனி தென்று
கதை கூறி நிற்கவில்லை
மக்களது வாழ்க் கையிலே
மலர்ச்சி நிலை வருவதற்கு
காதலைப் போல் மருந்ததனை
கண்டு கொள்ள முடியாது
சாதி பேதம் பார்க்காது
சமயம் கூட நோக்காது
சோதனைகள் வந்தி டினும்
சுகமுடனே ஏற்று நிற்கும்
பேதமெலாம் மறந்து விட்டு
பிரியமுடன் இணைப் பதனால்
காதல் என்றும் இனிதாக
கால மெலாம் இனிக்கிறது
அம்மாவின் காதல் அரவணைப்பு
அப்பாவின் காதல் வழிசமைப்பு
ஆசானின் காதல் அறிவூட்டல்
ஆண்டவனின் காதல் அருளாகும்
பூவுலகில் காதல் புனிதமே
புரியாத காதல் மெளனமே
சாதனையில் காதல் வைரமே
சந்தோசம் காதல் மலர்ச்சியே
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா