பெண்ணாய் பிறப்பெடுத்தால்… கவிதை…. கண்மணிமா
பெண்ணாய் பிறப்பெடுத்தால்
*மகளே* என்று வாரி அணைப்பீர்கள்…
அடுத்தடுத்து பெண் என்றால்
ஐயோ! என்று ஐயம் கொள்வீர்கள்…
தத்தி தாவி நடை பயின்றால்
*பேதை* என்று பெருமை பேசுவீர்கள்…
தாமதமாய் அடியெடுத்து வைத்தால்
தர்ம சங்கடத்துடன் அச்சம் கொள்வீர்கள்
பள்ளி நண்பர்களுடன் நட்பு கொண்டால்
*பெதும்பை* என்று ஒப்புக்கொள்வீர்கள்…
ஆண் நண்பர்கள் அதிகம் என்றால்
அந்நட்பையே கொச்சை படுத்துவீர்கள்…
சிறப்பாய் பேசி நடித்துக் காட்டினால்
*மடந்தை* என்று தட்டி கொடுப்பீர்கள்
சிந்தித்து கொஞ்சம் எடுத்துபேசினால்
சின்னவள் பேச்சி என்று மட்டம் தட்டுவீர்கள்…
வயதுக்கு வந்துவிட்டால்
அவள் பெரியவள் *மங்கை* என்பீர்கள்…
பூப்படைய சற்று தாமதித்தால்
படைத்தவனையே வஞ்சிப்பீர்கள்…
கண்ணுக்கு மையிட்டால்
அழகியென்று அதிசயிப்பீர்கள்…
கண்ணாடிக்கு முன் நேரம் கழித்தால்
இது நல்லதுக்கல்ல என்பீர்கள்…
ஆண்மகனிடம் தாலிகட்டிக் கொண்டால்
*அரிவை* மனைவி என்று பட்டமளிப்பீர்கள்
காதலித்துக் கைப்பிடித்தால்
கண்டப்படி பேசிக் கலங்கப்படுத்துவீர்கள்…
தன் குழந்தைக்கு தாயாகி விட்டால்
தாய்மை என்று தம்பட்டமடிப்பீர்கள்..
குழந்தை பாக்கியம் இல்லை என்றால்
மலடி என்று மகுடம் சூட்டுவீர்கள்…
தன் பிள்ளை தன்பெயர் காத்தால்
*தெரிவை* அவளின் வளர்ப்பு என்பீர்கள்…
அதே பிள்ளை தவறு இழைத்தால்
தாயை போல பிள்ளை என்பீர்கள்…
பிள்ளைகளை கரை சேர்த்து விட்டால்
அவள் ஓர் *பேரிளம்பெண்* என்பீர்கள்…
அப்பிள்ளையை சமூகம் தூற்றினால்
பெற்றவள் பொறுப்பற்றவள் என்பீர்கள்…
கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வந்தால்
குடும்ப குத்து விளக்கு என்பீர்கள்…
தடைகளை மீறி தனித்து வாழ்ந்து வந்தால்
தரம் கெட்டவளாய் தாழ்த்தி பேசுவீர்கள்…
பூவும் பொட்டுமாய் இறந்து விட்டால்
அவள் சுமங்கலி என்று போற்றுவீர்கள்…
கணவனை இழந்து விட்டால்
அவள் அமங்கலி என்று அப்புறப்படுத்துவீர்கள்…
அழகாக உடுத்தி சென்றால்
அம்சமான மகாலக்ஷிமி என்பீர்கள்…
விதவை கோலம் தரித்து விட்டால்
விலக்கி வைத்து வேடிக்கை பார்ப்பீர்கள்..
அண்ணன் தம்பி அற்றவள் என்றால்
பாவப்பட்டு இரக்கம் காட்டுவீர்கள்…
மற்றவர்களுடன் அண்ணன் தங்கையாக பழகினால்
வேறு பெயர் கூறி அசிங்கப்படுத்துவீர்கள்…
பிறர்கூறும் குறைகளை பொறுத்து பொறை காத்தால்
பொறுமை சாலி என்பீர்கள்…
எதிர்த்து நின்று கேள்வி கேட்டால்
இவள் அடங்காபிடாரி என்பீர்கள்…
ஆணோ பெண்ணோ உயிர் நீத்தால்
பிணம் என்று தானே சொல்வீர்கள்…
பின் உயிருடன் ஒன்றித்து வாழ்ந்தால்
பிரித்து ஏன் உயிர் எடுக்கிறீர்கள்…
-கண்மணிமா