உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதா..?; எடப்பாடி கேள்வி
‘திமுக ஒரு குடும்பக் கட்சி. திமுக நடத்துவது குடும்ப ஆட்சி. கருணாநிதி பேரன் – ஸ்டாலின் மகன் – என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதா?’ என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி வினா எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக சேலத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
” திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் அம்மா ஆட்சியில் தொடங்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில், 19 உணவகங்களை திமுக ஆட்சியில் முடி விட்டனர். இதனால் திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அம்மா உணவகத்திற்கு சென்று முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.
தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. கஞ்சா, போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்காவிட்டால் மாணவர்கள் இளைஞர்கள் சீரழிவார்கள்.
திமுகவில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், அனுபவமிக்க அமைச்சர்களும் உள்ளனர். ஆனால் குடும்ப கட்சியான திமுகவில் அவர்களுக்கு எல்லாம் துணை முதல்வர் பதவி கிடைக்காது.
கருணாநிதியின் பேரன் -ஸ்டாலினின் மகன்- என்ற தகுதி மட்டும் தான் உதயநிதிக்கு உள்ளது. இவருக்கு துணை முதல் அமைச்சர் பதவி கொடுப்பதா? ” என தெரிவித்திருக்கிறார்.