மலரின் மலர்ச்சி மனிதனுக்குப் பாடம்!…. கவிதை… ஜெயராமசர்மா
காலையிலே எழுந்தவுடன்
கண்ணெதிரே கண்டேன்
கவலையின்றிப் பூத்திருக்கும்
கட்டழகு ரோஜா
வேலையிலே விருப்பின்றி
சோம்பலிலே கிடந்தேன்
பூத்தரோஜா தனைப்பார்த்து
பூரிப்பு அடைந்தேன்
யாருக்காய் பூக்கின்றோம்
என்று தெரியாது
பூக்கின்றோம் பூக்கின்றோம்
பூத்தபடி நிற்போம்
பூப்பதிலே சோம்பலின்றி
பூதந்து இருப்போம்
பூப்பார்த்த வுடனேயே
பூரிப்பைக் கொடுப்போம்
சோம்பல் வந்துவிட்டதென
சோர்ந்துவிட மாட்டோம்
சுறுசுறுப்பாய் இருந்தபடி
சுகம்கொடுத்து நிற்போம்
சாந்தமெங்கள் போக்குவென
சகலருக்கும் தெரியும்
சந்தோஷம் கொடுப்பதுவே
எங்கள் இயல்பாகும்
மற்றவர் மகிழ்ச்சியுற
மகிழ்ந்துமே நிற்போம்
மற்றவர் மனமுடைய
வாழ்விலே நினையோம்
சோம்பலுற்று வாழ்வினிலே
சோர்ந்துவிட மாட்டோம்
சொர்க்கத்தைக் காட்டுவதே
சுகமென்று நினப்போம்
விழுகின்ற மலர்பார்த்து
விழுதழுதல் மாட்டோம்
விழுவது எழுவதற்கென
விழித்தெழிந்து நிற்போம்
அழுகின்ற தொழிலைநாம்
அழித்துமே விட்டோம்
ஆனதால் என்றென்றும்
அழகினையே தருவோம்
பறிப்பாரின் கையினைப்
பக்குவமாய்ப் பார்ப்போம்
பறித்தவர்கள் எம்மழகை
பார்த்தபடி நிற்பர்
குறித்தமலர் அழகையவர்
குதூகலத்தால் ரசிப்பர்
கொண்டாட்டம் என்றாலே
கொண்டையிலும் வைப்பர்
ஆண்டவனின் அருகினிலே
அடைக்கலமும் ஆவோம்
ஆவேசக் கைகளிலே
அசிங்கமும் படுவோம்
ஆனாலும் ஆத்திரத்தை
அடக்கியே வைப்போம்
ஆதலால் என்றுமே
அழகாக இருப்போம்
காதலிக்கு பரிசாக
எங்களையே கொடுப்பார்
கல்யாணப் பந்தலிலே
மங்கலமாய் இருப்போம்
மாலையாய் கட்டியே
சூடியே மகிழ்வார்
மணமக்கள் அணைக்க
மகிழ்ச்சியையும் கொடுப்போம்
மானிலத்தில் மலர்கள்தான்
மாண்பான படைப்பு
தன்னலமே கருதாத
தனியான படைப்பு
உதிர்ந்தாலும் பூக்கும்
உன்னதமாம் படைப்பு
உளமகிழ வைப்பதே
மலர்களின் பிறப்பு
சமயங்கள் அத்தனையும்
நேசிக்கும் படைப்பு
சாதியை மொழியை
இணைக்கின்ற படைப்பு
சமத்துவமாய் யாவருக்கும்
இருக்கின்ற படைப்பு
சந்தோசம் தருகின்ற
மலர்களின் படைப்பு
மலரும் மணமும்
மனதை மயக்கும்
மலரும் மணமும்
இறையை இணைக்கும்
மலரும் அழகும்
புவியின் சொர்க்கம்
மலர்வு என்பதே
விடிவின் ஒளியே !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்,
மெல்பேண், அவுஸ்திரேலியா
சமத்துவத்தின் உள்ளத்தின் அகமகிழ்வு எண்ணங்களின் நினைவது தங்களின் மலர்க்கவிதையின் வடிவமதில் கண்டேன்.
அருமை,அருமை மகிழ்ச்சி .