காவிரி விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடத் தீர்மானம்
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடக அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரினை சென்ற ஆண்டு கர்நாடக அரசு விடுவிக்காததால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடி அதன்பின்னர் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழலிலும் கர்நாடக அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே தேவை ஏற்படின் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.
இந்த தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழு முயற்சியோடு மேற்கொண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளிக்கிறேன்” இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.