அவரவர் வாழ்வில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்
சந்தேகம் தீர பதில் சொல்லடா என்று நண்பனிடம் வீடுபேறென்றால் என்னவென ஆவலோடு கேட்டேன்
சொர்க்கம் என்கிறார்களே அதுதான் என்றான் சரி, அது எங்கே உள்ளது என்றதும்
மேலே உள்ளது என்றான் நம்பிக்கையோடு
உனக்கு எப்படித் தெரியும் இவ்வளவு உறுதியொடு சொல்கிறாய்? என்றதற்கு
எல்லோரும் சொல்வதால் நானும் சொல்கிறேன் என்றான் அப்பாவியாக
யார் அந்த எல்லோருமென்று நான் கேட்க எல்லா மதத்தினரும் என்றான்
அப்படியா சொல்கிறார்கள் எனக்கேட்டு உறுதி செய்துகொண்டேன்
அப்படியானால் மேலே சென்ற எல்லாமதத்தினரும் ஒன்றாக இருப்பார்களா? என்றேன்
தெரியவில்லையே என்றவன் ஒரே இடத்தில் ஒன்றாக இருக்கலாம் என்றான்
எதனால் அப்படிச் சொல்கிறாய் என்றேன்
சொர்க்கம் சென்றபின்னும் பேதம் பார்க்கமாட்டார்கள் என்றான்
அப்படி பேதம் பார்க்காதவர்கள் இங்கேயே சொர்க்கத்தை உருவாக்கலாம் அல்லவா என்றேன்?
அப்படி இருந்தால் உலகம் இயங்காது என்றான்
என்ன இது? புதிதாக குண்டொன்றை தூக்கிப் போடுகிறாய் என்றேன்
குண்டையும் தூக்கிப்போடல வெடியையும் தூக்கி வீசல என்றான்
அப்புறம் என்ன என்றேன்?
அரசியல்வாதிகளும் மதவாதிகளும் இருக்கும்போது சொர்க்கத்தை இங்கே எப்படி உருவாக்க விடுவார்கள்?
அப்படியே உருவாக்கினாலும் உலகம் எவ்வாறு இயங்கும்? என்றான்.
பேதத்தை உருவாக்கும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் இல்லாவிட்டால்
என்னவாகும் அதையும் சொல் என்றேன்?
சொர்க்கம் பற்றி பேசும் மதவாதிகளுக்கும்
பேதம் உருவாக்கும் அரசியல்வாதிகளுக்கும்
வேலையின்றி போய்விடும் என்றான்?
ஐயோ தலைசுற்றுகிறதே என்றேன்
இவ்வளவு நேரம் துருவித்துருவி கேள்விகேட்டு விட்டு இப்போது தலைசுற்றுகிறது என்கிறாயே என்றான்
நீ சொல்வதைக் கேட்டால் தலை சுற்றாமல் வேறென்ன செய்யும் என்றேன்
இப்போது எனக்கு தலைசுற்றுகிறது
அரசியலும் அரசியல்வாதிகளும்
மதமும் மதவாதிகளும் இல்லாத இவ்வுலகில் எப்படி வாழ இயலும்?
என்னதான் சொல்லவருகிறாய் சொல்வதை புரியும்படி சொல் என்றேன்
தினமும் கொலைகள் கொள்ளைகள்க ள்ளச் சாராயம் குடித்து மடியும் மக்கள்
தடையின்றிக் கிடைக்கும் போதைப்பொருள் அதனால் சீரழிந்து கிடக்கும் சமுதாயம்
குவார்டருக்கும் பிரியாணிக்கும் மட்டுமே கட்சிக் கூட்டம் வரும் பொறுப்பற்ற மக்கள்
கையூட்டு வாங்குவதாக குறை கூறியபடியே இலவசம் பெற்று வாக்களிக்கும் மக்கள்
மதங்களால் மக்களை பிரிக்கும் மதவாதிகள்
அரசியலால் மக்களை மோதவிடும் அரசியல்வாதிகள்
இவர்கள் எவரும் இங்கே இல்லாது போனால்
வாழ்க்கையில் பரபரப்பு எதுவுமேயின்றி
நரகமாகிவிடாதா என்று கேட்டான் நண்பன்!
-சங்கர சுப்பிரமணியன்.