2031-க்குள் இந்தியா 2-வது பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்பு
தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக திகழும் இந்தியா, 2048-ம் ஆண்டுக்குள் 2-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா 2031 ஆண்டுக்குள்ளாகவே பொருளாதார ரீதியாக 2-வது பெரிய நாடாக உருவாக சாத்தியம் உள்ளது என்று ஆர்பிஐ துணை கவர்னர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரப் பயணம் சிறப்பாக உள்ளது. தற்போது இந்தியா 3.6 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உள்ளது. 2047-ம்ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறவேண்டும் என்ற இலக்கில் இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், இந்தியா அடுத்த 10 ஆண்டுகளுக்கு சராசரியாக 9.6 சதவீத அளவில் வளர்ச்சி அடைய வேண்டும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் முயற்சியை ஆர்பிஐ மேற்கொண்டு வருகிறது.
பணவீக்கம் 2024-25 நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும், 2025-26நிதி ஆண்டில் 4.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதே நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளம்” என்று தெரிவித்தார்.