கவிதைகள்
சக்கர நாற்காலியில் இருந்த என்னை…. கவிதை…. முல்லைஅமுதன்
கடலின் கரைகள்
அங்கு போல இல்லைதான்..
வானத்துடன் நட்சத்திரங்கள்
பேசிக்கொள்வதப்போல
இங்கும் நானும்
பேசிக்கொள்ள முயல்கிறேன்..
வானம் நிராகரிப்பினும்
நிறைய புகை கக்கியபடி
விமானங்கள்…
ஒவ்வொரு இரவும்
இறந்துவிழும் நட்சத்திரங்கள்…
அதிகமான பொழுதுகளில்
வானம் அழுதுகொண்டிருப்பதை
அவதானிப்பதாக மகளும் சொல்லுவாள்.
நட்சத்திரங்களைப் பொறுக்கப் போன என்னவளும்
பொசுங்கிப்போன நாளில் இருந்து
வானத்தைபார்க்கவே பயமாக இருக்கிறது.
கடலும் அங்குபோல இல்லை.
சக்கர நாற்காலியில் இருந்த என்னை
மீள அழைத்துவந்தாள் செவிலித்தாய்.
கடலை,வானத்தை,நட்சத்திரங்களைப்
பற்றிய ஆயிரம் செய்திகள்
அவளிடமும் இருக்கலாம்..
முல்லைஅமுதன்
14/07/2024