அதிகாலையில் நடந்த கோர விபத்து: 18 பேர் உயிரிழப்பு, 19 பேர் படுகாயம்
இந்தியாவின் உத்தரபிரதேசம், உன்னாவ் மாவட்டத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஸ்லீப்பர் பேருந்து டேங்கர் ஒன்றின் மீது மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் பகுதியில் உள்ள ஜோஜிகோட் கிராமத்தில் பெஹ்தா முஜாவர் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற இரட்டை அடுக்கு பேருந்து, டேங்கர் மீது மோதியதில், அதிகாலை 05:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த அனைவரையும் மீட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் அலுவலகம் (CMO) படி, அவர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.