இந்தியா

இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் வியப்பு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் வேகத்தைக் கண்டு உலகமே வியப்படைவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமையன்று புலம்பெயர்ந்த இந்தியர்களின் மத்தியில் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய திரு மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் வேகத்தைக் கண்டு உலகமே வியப்படைகிறது. உலக மக்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, ‘இந்தியா மாறுகிறது’ என்கிறார்கள்.

“இந்திய விமான நிலையங்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்கியபோது இந்தியாவின் சக்தியை உலகம் உணர்கிறது.

“இன்றைய இந்தியாவில் உலகின் மிக உயரமான ரயில் பாலம், உலகின் மிக உயரமான சிலை உள்ளிட்டவை அமைக்கும்போது இந்தியா மாறுவதை உலகமே பார்த்து வியப்படைகிறது. 140 கோடி மக்களின் ஆதரவை இந்தியா நம்புகிறது. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் ஆதரவை நம்புகிறது. 140 கோடி இந்தியர்களும் ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் இருக்கத் தயாராகி வருகிறார்கள்.

“கொரோனா பெருந்தொற்றைக் கடந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். நமது உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்குவது மட்டுமின்றி சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவது, அனைத்து ஏழைக்கும் இலவச சிகிச்சை அளிப்பதை செய்து வருகிறோம்,” என்றார்.

“2014க்கு முன், நாடு விரக்தியின் ஆழத்தில் மூழ்கியிருந்தது, தற்போது தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்து மற்றும் கடைசி நிமிடம் வரை இந்திய இளைஞர்கள் தோல்வியை ஏற்கவில்லை.

“பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்தியா ஒரு சிறந்த அணியை அனுப்புகிறது. முழு அணியும் விளையாட்டு வீரர்களும் தங்கள் பலத்தை எவ்வாறு காட்டுவார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். இளைஞர்களின் இந்த தன்னம்பிக்கைதான் இந்தியாவின் உண்மையான மூலதனம். இந்த இளைஞர் சக்தி, 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய ஆற்றலை காட்டுகிறது.

“நல்ல செய்திகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கசான் மற்றும் யெகாடெரின்பர்க்கில் புதிய தூதரகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளோம். இது பயணம் மற்றும் வணிக வர்த்தகத்தை மேம்படுத்தும்,” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

“பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்தியா – ரஷ்யா இடையிலான நட்பு ரீதியிலான உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தருணங்களில் அது சோதனைக்கு உள்ளானது. அப்போதெல்லாம் இந்த நட்பின் பிணைப்பு மேலும் கூடியுள்ளது. எனது நண்பரும், அதிபருமான புட்டினை நான் பாராட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் இருவரும் 17 முறை சந்தித்து உள்ளோம். நான் ஆறாவது முறையாக ரஷ்யா வந்துள்ளேன். நம் மாணவர்கள் இங்கு சிக்கித் தவித்தபோது ரஷ்யா உதவியுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவுக்கும், புட்டினுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றும் திரு மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.