மன்னார் பரப்புக் கடந்தான் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!… புலம்பெயர் மக்கள் உதவியுடன் கோவில் புனர்நிர்மாணம்!!
பரப்புக்கடந்தான் கிராமம் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து 7கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. யாழ்ப்பாணம், மன்னார் பாதையில் இருந்து மிகவும் இலகுவாக இந்த கிராமத்திற்கு செல்லலாம்.
அழகிய அமைதியான கிராமம்:

திருக்கேதீஸ்வர சந்தியில் இருந்து ஆண்டாங்குளம் சென்று அந்தச் சந்தியில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் இந்த அழகிய, அமைதியான கிராமம் அமைந்து இருக்கிறது. கிராமத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் இது தன்னகத்தே கொண்டிருக்கிறது. போகும் பாதையில் காணப்படும் மருதமரங்கள் இன்னும் இதனை அழகூட்டுகிறது.
அழகான தாமரைக்குளம் ஒன்றும் அங்கே இருக்கிறது. இந்தக்குளம் கட்டுக்கரைக் குளத்தில் இருந்து நீரைப் பெறுகிறது. அங்கே வாழும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதனால் கிராமம் வயல்களால் பச்சை பசேலாக எப்போதும் காட்சியளிக்கிறது.
மன்னார் மாவட்ட பரப்புக் கடந்தான் இந்துக்களும் கத்தோலிக்கர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் கிராமமாகும். இந்த கிராமத்தில் உள்ள இந்துக்களின் இரண்டு வழிபாட்டுத் தளங்கள் போரால் முற்றிலும் அழிந்த நிலையில் காணப்பட்டது.
இந்தக் கிராமத்தில் உள்ள அநேகமான மக்கள் யுத்த காலத்தின் போது இந்தியாவுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர். சிலர் அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட வேறுசிலர் தற்போது திரும்பி வந்திருக்கின்றனர். யுத்த காலத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்றாகும்.
யுத்தம் அழித்த கிராமம்:
யுத்தத்திற்கு முன்னர் இங்கே இரு இந்து கோயில்கள் இருந்திருக்கின்றன. இந்து மக்களுக்கான இந்தக் கோயில்கள் யுத்தத்தின் பின்னர் கைவிடப்பட்டதன் காரணமாக நீண்டகாலமாக கவனிப்பாரின்றி இயங்காமல் பூசைகள் இன்றி இருந்திருக்கிறது.
கிராமத்தில் உள்ள ஐம்பது இந்துக் குடும்பங்கள் வழிபட கோவில் இன்றி, கோவில் மணியோசை கேட்காமல் கலகாலம் மக்கள் அங்கே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
கோவில் புனர்நிர்மாணம்:
இந்த நிலையை மாற்றுவதற்காக புலம்பெயர் வாழ் மக்களின் உதவியுடன் இந்த கோவில் புனர்நிர்மாணமும் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு இரவு நேரத்தில் ஒளியூட்டப்பட்ட இடமாகவும் கணணி மற்றும் புத்தக வசதியுள்ள சிறிய வாசிகசாலையும் அமைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்துமாரி அம்மன் கோவில் தற்போது புணர் அமைக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த கிராமத்தில் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் வந்து வருகின்றார்கள். அத்துடன் உயர்கல்வி கற்றவர்கள் மிகவும் குறைவாக காணப்படுகின்றார்கள்.
தற்போது பரப்புக் கடந்தானில் உள்ள பாழடைந்த நிலையில் காணப்பட்ட கோவில் திருத்தப்பட்டு குழாய் கிணறு, மணிக்கூட்டு கோபுரம் அமைக்கப்பட்டு, மாணவர்கள் படிப்பதற்கு வாசிக சாலையும் அமைக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
– கலைச்செல்வி பாஸ்கரன்.

![]()