இந்தியா

தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமாகுமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அன்புத்தங்கை உமா குமரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது.

இனவழிப்பு தந்த காயங்களோடும் கண்ணீரோடும் ஊரிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிர் சுமந்த உடல்களாக அடைக்கலம் தேடி அலைகின்ற  நூற்றாண்டுப் பெருந்துயரைக் கண்ட தமிழினத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் இதுபோன்ற சிறுசிறு அதிகாரப்பகிர்வும் அங்கீகார நிமிர்வும் மிகவும் இன்றியமையாததாகும். தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது என்பதால் தங்கை உமா குமரனின் வெற்றி உலகத்தமிழினத்தின் வெற்றியாகும். தம்மைத் தேர்ந்தெடுத்த  ஸ்ட்ராட்ஃபோர்ட்ரூபோ தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் சிறப்புற பணியாற்றவும் உலகத்தமிழர்களின் உரிமைக்குரலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும் தங்கை உமா குமரனுக்கு  என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!

அவரைபோன்றே தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை கிருஷ்ணி ரிசிகரன் தாராள சனநாயகவாதிகள் கட்சி  சார்பில் போட்டியிட்ட அன்புத்தம்பி ஜாகிர் ஹுசேன் ஆகியோர் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தபோதிலும் அதற்காக எவ்வித தற்சோர்வும் அடைய வேண்டாம்; ‘தோல்வியே வெற்றியின் தாய்’ என்னும் முதுமொழிக்கேற்ப  தொடர்ந்து மக்கள் பணியாற்றினால்இ எதிர்காலத்தில் உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள். மக்கள் தொண்டாற்ற வேண்டுமென்ற உங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!

இங்கிலாந்து நாட்டில் பெருவெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும் பிரதமராக பதவியேற்கும் கெய்ர் ஸ்டார்மர் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அடைந்துள்ள ஆட்சி அதிகாரமானது இங்கிலாந்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்விலும் புதிய மலர்ச்சி ஏற்படவும் ‘ஈழத்தாயக விடுதலை’ எனும் தமிழர்களின் இலட்சிய கனவு வென்றிடவும் உறுதுணையாய் இருக்குமென நம்புகிறேன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.