யாரோ ஒருவருக்காக… ( கவிதை)… முல்லை அமுதன்.
நிற்பதற்கு வசதியாக
தயார்படுத்திக்கொண்டேன்.
வந்தவனும் நிலையெடுத்திருந்தான்.
இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கவேண்டாம்
என்றே நினைத்திருந்தேன்.
யாரோ ஒருவருக்காக
யாரோ ஒருவரின் நட்புக்காக
இந்தச் சந்திப்பு நிகழ்ந்துவிட்டது..
ஆனால்,
யாரோ ஒருவரின் நண்பர்
சாவகாசமாக தோளில்
தோழமையுடன் இறுகப்பற்றியது..
பாம்பு உடலில் ஊர்ந்தது போலிருந்தது..
சந்திப்பு நிகழாமலேயே இருந்திருக்கலாம்.
யாரோ ஒருவருக்காக வந்து..
யாரோ ஒருவருக்காக கைகுலுக்கி,
எதேச்சையாக நிமிர்ந்து பாத்தேன்.
யாரும் பார்க்காத ஒரு பொழுதில்
அவன் கண்கள் பல சேதிகளைச் சொல்லின..
‘தாக்குதலுக்காக ஒரு இரவில்
காத்திருந்தபோது
கூடவே நின்று அவர்களுக்கு காட்டிக்கொடுத்தவனை…..
உடற்காயங்களுடன்…நான்…
அவனின் கண்கள்
இப்போதும் பல சேதிகள் சொல்லியது..
சந்திப்பு நிகழ்ந்திருக்கக் கூடாது…
எனித் தப்பித்துக் கொள்ளமுடியாது..
முல்லைஅமுதன்.