“கொம்பு அவர்களுக்கானது” … கவிதை … முல்லைஅமுதன்.
இன்னமும் கொம்பு முளைத்துவிடவில்லை.
கொம்புடன் அலைவதில்
உடன்பாடு எனக்கில்லை.
திரையை விலக்கி
பார்க்கையில் கொம்புடன் பலரும் திர்வதைப் பார்க்கமுடிந்தது.
எனக்கென்ன..
கொம்பு அவர்களுக்கானது
விரும்பியவாறு அணிந்துகொள்ளட்டும்.
கொம்பில் என்ன இருக்கிறது.
பாதுகாக்க முடியுமா?
முன்னர் வாங்கிய கொம்பை
துடைத்து அழகுபடுத்திய மனைவி
சலித்துக்கொள்கிறாள்.
வீட்ட அடைத்துவிடுவதாக மகள் முணுமுணுக்கிறாள்.
அன்றும் அப்படித்தான்.
சன் நெரிசலில் வரிசையில் நின்று
படி அரிசி வாங்கி
அன்றைய சமைலுக்கு உதவிட்டு,
பிள்ளைகளை
கல்வி நிலையங்களிலிருந்து அழைத்துவந்து,
மருந்துக்கடையில்
எனக்கான அத்தை உடல் உபாதைகளுக்கான
மருந்துகளை
வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டுச்
சென்றிருந்தேன்.
நண்பனிடம் கைச்செலவுக்கு வாங்கிய கொஞ்சம் சில்லறைகளை
மீண்டும் தட்டிப்பார்த்தொக்கொண்டேன்.
நேரமாகிவிட்டது.
யாரும் கவனிக்கவில்லை.
கவனிக்கப்படாதவனுக்கு
மரியாதை கிடைப்பதேயில்லை.
யாரும் அழைக்கவில்லை.
அழைப்பிதழில் எனது பெயரும் இருந்ததே.
ஒவ்வொருவராக
தங்களுக்கான கொம்புகளை
வாங்கிச்சென்றனர்.
தனது புத்தகத்திற்குக் கிடைத்ததாக
கொம்பை
உயர்த்திக்காட்டியபடி நகர்ந்துகொண்டிருந்தார்.
‘வாழ்நாள் சாதனையாளர்’ எனச் சொல்லியே அழைத்திருந்தனர்.
ஏமாற்றதுடன்
திரும்பி பெட்டிக்கடையில் தீப்பெட்டி இருக்கா?கேட்டேன்..
எனது நாவலை கழுத்தில் பட்டி போட்டு
தொங்கவிட்டிருந்தார் அந்த பெட்டிக்கடைக்காரர்.
முல்லைஅமுதன்