பீகாரில் மீண்டும் இடிந்து விழுந்த பாலம்; கன மழையால் நீரோட்டம் பெருக்கெடுத்ததே காரணம்
இந்தியா, பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களை இணைக்கும் விதமாக பஹதுர்கஞ்ச் பகுதியிலுள்ள மதியா ஆற்றின் மீது பாலமொன்று கட்டப்பட்டிருந்தது.
2011ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருந்து இந்த பாலம் நேற்று வியாழக்கிழமை காலை திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.
குறித்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து, அதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடைந்து விழுந்த பாலத்தை பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்ததாக பீகாரில் 3 பாலங்கள் இடிந்து விழுந்தன. அதனுடன் தற்போது நான்காவது பாலம் இடிந்து விழுந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் பாலங்கள் இடிந்து விழுந்ததில் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றாலும் பாலங்களின் கட்டுமானங்கள் குறித்து ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.