“இரண்டு மனம் வேண்டும் இயற்கையிடம் கேட்டேன்” …. கவிதை ….. சங்கர சுப்பிரமணியன்.
அவனை நண்பனாகத்தான் நினைக்கிறேன்
அவன் அப்படி நினைக்கிறானா?
தெரியலையே என்ற பதிலே என்னிடமுள்ளது
நானும் நீயும் ஒன்றென்றால்
நான் வேறு நீ வேறு என்கிறான்
பாசத்தோடுதான் பழகிவருகிறான்
நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றேன்
அதெப்படி? உன் தாய் வேறு
என் தாய் வேறு என்கிறான்
நமக்குள் தொப்புள்கொடி உறவுள்ளது என்றால்
தொப்புள்கொடி அவ்வளவு நீளமாகவா இருந்தது என்கிறான்
நான் அவனிடம் பகுத்தறிவு பேசினால்
தி. க. வா என்கிறான்
தி. க. வுக்கு முன்பே திருமூலர் பேசினார்
என்றால்
ஏற்க மறுத்து ஏளனமாய் பார்க்கிறான்
உடன்பிறப்பு என்று ஒரு வார்த்தை சொன்னால்
தி. மு. க. வா என்று திருப்பி கேட்கிறான்
உடன்பிறந்து கொல்லும் நோயல்ல நான் என்றேன்
இரத்தத்தின் ரத்தமே என்று சொன்னாலோ
அ. தி. மு. க. வா என்று இளக்காரம் செய்கிறான்
ரத்ததானம் செய்பவன் நானென்பதால் ரத்தத்தின் மகிமை உணர்வேன் என்றேன்
மாம்பழம் எனக்கு பிடிக்கும் என்றால்
சிறதும் தயங்காது
பா. ம. க. வா என்கிறான்
முக்கனிகளில் ஒன்றைத்தானே பிடிக்கும் என்று சொன்னேன் என்றேன்
குற்றம் கண்டால் சிறுத்தைபோல் சீறுவேன் என்றாலோ
வி. சி. க. வா என்று வியந்து பார்க்கிறான்
சிறுத்தையின் சீற்றத்தில் வியப்பென்ன வேண்டிக் கிடக்கிறதென்றேன்
என் அன்புக்குரிய சொந்தங்களே என்றால்
நா. த. க. வா என்று நையாண்டி செய்கிறேன்
சொந்தங்கள் அன்போடு இருக்க மாட்டார்களா என்ன என்று கேட்டேன்
நான் இதற்கெல்லாம் அப்பாற் பட்டவன் என்றேன்
அப்படியானால் ம. நீ. மையமா என்றபடி
இதுவரை க. வா, க. வா என்றவன்
இப்போது ஐயத்தோடு மையமா என்கிறான்
என் தமிழையை என்னால் பேசமுடியமல்
ஏதேதோ சொல்லி இழிவு செய்கிறான்
அவன்மேல் எனக்கு பாசமே தலைதூக்குகிறது
ஏனென்றால் நான் அப்படியில்லை
சொல்லடி சிவசக்தி
இனப்பற்றுடன் எனைப் படைத்து விட்டாய்
அவன்மீதொரு களங்கம் நான் சொல்ல மாட்டேன்
யாரோ செய்த பழி பாவத்திற்கு
எய்தவன் இருக்க என்னை அம்பாக நினைக்கிறான்
இறை நம்பிக்கை எனக்கில்லையே
இருந்தால் அநுமனைப் போல் நெஞ்சைப் பிளந்து காட்டி நிற்பேன்
அவன் நல்லவன்தான்
எனக்கு மட்டும்தான் எய்தவன் இருப்பானா என்ன?
அவனுக்கும் எய்தவன் ஒருவன் கருப்பாடாய்
கதைத்துக் கொண்டிருப்பான்
ஊரு ரெண்டு பட்டால்தானே கூத்தாடிக்கு கொண்டாட்டமெல்லாம்
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
கண்ணதாசன் உணர்ந்துதான் பாடிச்சென்றான்
எய்தவனையும் இயல்பையும் நிறம் காணாது போனால்
அங்கே அவனும் அழிப்பான் இங்கே இவனும் அழிப்பான்
இனப்பற்று அழிந்து நம்வாழ்வும்
தடம் மாறிப் போகும்
ஒன்றை நான் கூற மறந்து போனேன்
என் பெயர் சிவபாலன்
நண்பன் பெயரோ சிவராசா
-சங்கர சுப்பிரமணியன்