அகதியாய் கொஞ்சகாலம்….. (முல்லை அமுதன்)
ஊரிலிருந்து
முற்றாக நீங்கி வந்திருக்கவேண்டாமோ என
நினைக்கத்தோன்றுகிறது.
அதிகாலையில்
பால் கொண்டுவரும் வெள்ளச்சி..
முற்றத்தின் அசிங்கங்களை மணலால் மூடி
பெருக்கும் அம்மம்மா.
‘தின்னவேலிசந்தைக்குப் போறன்’
கிறீச் கிறீச் சத்தமிட மிதிச்செல்லும்
எம் எஸ் எனும் கந்தசாமி மாமா..
தோழிகளுக்கென தன் கொம்பாஸ் பெட்டிக்குள்
சில மாங்காய் நறுக்குக்களுடன்…
சில புளியங்காய்காய்களும்..
அம்மா கத்துவாள்.
ஆயினும்
தினசரி கடைக்குட்டி சர்மிளி சின்னதாய்
இப்படி களவுகள் செய்யாமல் இருந்ததில்லை.
யாரோ ஒருத்திக்காய்
யாரோ ஒருவனிடம் அடிவாங்கிவரும் தம்பி…
மாலையானதும்,
சோமசுந்தரம் கடைக்குப் பின்னால்
ஒன்று கூடி நண்பர்களுடன்,
சீட்டாடி,குடித்து,தோற்றுப்போய்..
மகாபாரத்து தருமனாய் அப்பா..
நல்லவேளை அவர் அம்மாவை
கடசிவரை அடைவு வைக்கவில்லை.
கொடுத்த சீதன போதவில்லை
என தாய் வீட்டிலேயே தங்கிவிட்ட அக்காவிற்கு
நான்கு பிள்ளைகள்…
கூட்டுகுடும்பம் என்பார்களே அதுவா..இது..
யாரும் புறுபுறுத்ததில்லை..
யாரும் யாரிடனும் நோவதில்லை..
சமயங்களில் தனிதீவுகளாயும்,
சில சமயங்களில் ஜனநாயக
அணிகளாயும் எனது குடும்பம்…
முற்றத்தில் அதுவாய் பெய்யும்…
அதுவாய் எரிக்கும்..அதுவாய் வீசும்..
மழையும் வெயிலும்,காற்றும்..
இங்கும் பெய்கிறது..
இங்கும் உள்ளதுதான் சூரியனும் காற்றும்..
ஆனாலும் எல்லம் இழந்த தனிமைச் சிறையில்..
அகதியாய்..
எப்பாவது அதிகாரிகள் வரலாம்.
எப்போதாவாது கூடிக்கதைக்க நண்பர்கள் என சிலர் வரக்கூடும்.
எப்போதாவது கையில் கொஞ்சம் பணம் கிடைக்கும்.
நினைக்காத போது வரும் கடவுளரைப் போன்று
எப்போதாவது வதிவிட அனுமதி கிடைக்கலாம்…
அகதியாய் கொஞ்சகாலம் வாழ்ந்துபார்ப்போம்.
முல்லை அமுதன்
22/06/2024