முச்சந்தி

வட கொரிய அதிபர் கிம் உடன் சந்திப்புகளால் இன்று புட்டினும் – அன்று டிரம்பும் சாதித்தது என்ன? … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

தற்போது வடகொரிய தலைவரை புட்டின் சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைப்போல, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு 2019 பிப்ரவரி இறுதியில் வியட்நாமில் நடைபெற்றது.
இதில் என்ன தற்பாரியம் உள்ளதென்றால், இருவருமே தமது ஆளுமைக்குள் வட கொரியாவை வைத்திருக்க வேண்டும் என்பதே. தீபகற்கமான கொரியாவில் நீண்டகாலமாக போர்ப் பதற்றம் எப்போதும் நிலவுகிறது. இரு வல்லரசுகளும் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கொரிய தீபகற்பத்தை கட்டுப்படுத்த முயல்கின்றன என்பதே உண்மையாகும்.
புட்டினின் வடகொரிய விஜயம் :
அமெரிக்காவின் பொருளாதார அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், இராணுவ அச்சுறுத்தல்கள் போன்றவற்றிற்கு மத்தியில் தனது நலனை பாதுகாப்பதற்காக வடகொரியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
24 வருடங்களிற்கு பின்னர் புட்டின் வடகொரியாவிற்கு சென்று இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைனிற்கு எதிரான ரஷ்யாவின் யுத்தத்திற்கு உறுதியான ஆதரவை வழங்குவதற்காக வடகொரியாவிற்கு புட்டின் நன்றியும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில், வடகொரியாவுக்கு வரும்படி புட்னினை வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அழைத்திருந்த நிலையில், புட்டின் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து:
கடைசியாக, 2000-ம் ஆண்டு ஜூலையில், வடகொரியாவுக்கு புட்டின் பயணம் மேற்கொண்டார். 24 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபரும், வட கொரிய தலைவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அத்துடன் மேற்குநாடுகளால் கட்டுப்படுத்தப்படாத பொருளாதார பாதுகாப்பு முறையை வடகொரியாவுடன் இணைந்து உருவாக்குவேன் என்றும் புட்டின் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிக்கான பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பன்முனைப்படுத்தப்பட்ட உலக ஒழுங்கை ஸ்தாபிப்பதை தடுக்கும் மேற்கத்தைய இலட்சியங்களை ரஷ்யா உறுதியாக எதிர்க்கும் என ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வடகொரிய ஆயுதங்களை பெறும் ரஷ்யா:
உக்ரைன் மீது நடத்தப்படும் போரில் வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு உள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர், முன்னெப்போதையும் விட இரு தலைவர்களிடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையிலும் புட்டின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அத்துடன் யாராவது தாக்கினால் இணைந்து செயல்படுவோம் ரஷ்யா – வட கொரியா அதிபர்கள் ஒப்பந்தம் இட்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா மற்றும் வட கொரியா, யாராவது தாக்குதல் நடத்தினால், ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டுவது என்று ஒப்பந்தம் செய்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யா போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து, பொருளாதார தடையையும் விதித்துள்ளன. ஆயினும்
உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.
வடகொரிய அணு ஆயுத பலம்:
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இரும்பு கோட்டையாக விளங்கும் வட கொரியாவின் அசைக்க முடியாதத் தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார்.
பல புதிய ஏவுகணைகளை, அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு அந்த நாடு நேரடியாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ளது. அதுபோல பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், வடகொரியாவுக்கு, ரஷ்ய அதிபர் புட்டினி்ன் விஜயம், உக்ரைனுக்கு எதிரான போரில் அதற்கு தேவையான ஆயுதங்களை வட கொரியாவிடம் இருந்து பெறும் நோக்கத்துடன் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக, வட கொரியாவுக்கு, அணு ஆயுதங்கள் உள்ளிட்டவை தயாரிப்பதற்கான தொழில் நுட்பங்களை ரஷ்யா வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
டிரம்ப் – கிம் 2019 சந்திப்பு:
தற்போது வடகொரிய தலைவரை புட்டின் சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைப்போல, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு 2019 பிப்ரவரி இறுதியில் வியட்நாமில் நடைபெற்றது.
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடி, இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போதய அமெரிக்க பாதுகாப்பு செயலர் மைக் பாம்பியோ மற்றும் கிம்மின் மூத்த ஆலோசகர் கிம் யாங் – சோல் ஆகியோர் இச்சந்திப்பில் உடனிருந்தனர்.
இதற்கு முன்னர் 2018 ஜூனில்
அமெரிக்க அதிபரும், வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் சந்தித்தனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதன் பின்னரான வியட்நாம்
சந்திப்பிலும் அணு ஆயுதத்தை முழுமையாகக் கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கிம் கூற டிரம்ப் அதை ஏற்காததால் இந்த சந்திப்பும் தோல்வியில் முடிந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *