விஜய் – சீமான் கூட்டணி; தமிழக அரசியலில் திடீர் திருப்பம்
இந்திய மக்களை தேர்தலின் பின்னர் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளதுடன், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் இருந்துவந்தன. இந்த இரண்டு கட்சிகளுமே கடந்த 6 தசாப்தங்களாக மாறி மாறி அதிகாரத்தை கைப்பற்றின.
8.2 சதவீத வாக்கு வங்கி
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவின் பின் அதிமுகவின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிந்துவருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றது.
அதிமுக ஒரு இடத்தைக்கூட கைபற்றவில்லை என்பதுடன், வாக்கு வங்கியிலும் பாரிய சரிவை சந்தித்துள்ளது. 40 சதவீதம்வரை வாக்கு வங்கியை கொண்டிருந்த அதிமுக 18 சதவீதம்வரை சரிந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கிகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் பாஜகவுக்கான உண்மையான வாக்கு வங்கியை கணிக்க முடியாதுள்ளது.
ஆனால், எந்தவொரு கூட்டணியையும் அமைக்காது தனித்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சி 8.2 சதவீத வாக்கு வங்கியை பெற்று மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.
அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க முடியாது
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியானது தமிழக அரசியலில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதுடன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதன் வளர்ச்சி அபரீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. திமுகவின் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக விஜய் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.
எந்தவொரு கட்சியானலும் தமிழகத்தில் தனித்து ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது கடந்த பல தசாப்தங்களாக கட்சிகள் உணர்ந்துள்ள பாடம்.
இதனால் நடிகர் விஜய் தமது கட்சியை அதிகாரத்துக்கு கொண்டுவர வேண்டுமென்றால் தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது கட்டாயமாகும். ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள விஜய் அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க முடியாது.
ஆதரவு இல்லை
அதனால் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கடந்தவாரம் விஜய் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இருவரும் சில இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் – சீமான் கூட்டணி அமைந்தால் நிச்சயமாக 2026 சட்டமன்றத் தேர்தலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
என்றாலும், இருவரும் எந்தவொரு உத்தியோகப்பூர்வ தகவல்களையும் இதுகுறித்து வெளியிடவில்லை என்பதுடன், எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி நடைபெற உள்ள விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் விஜயின் தவெக அறிவித்துள்ளது.
என்றாலும், விஜயின் தவெக 2026இல் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது உறுதியென சில செய்திகள் தமிழக ஊடகங்களில் நேற்றுமுதல் வெளியாகி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.