பாஜக, பாமக அதிமுகவின் தோழமைக் கட்சிகளா?; குழப்பத்தில் அதிமுக நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று கூறி வந்தார் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போட்டியிடாமல் அவரது கட்சி பின்வாங்கியுள்ளது.
இது அரசியல் கட்சியினர், அதிமுக நிர்வாகிகள் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அங்கு பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகப் போட்டியிட வேண்டாம் என்று அதிமுக விலகியிருக்கலாம் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, பாமக வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்கும் வகையில், மேலிடத்தில் (பாஜக) இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு தெளிவான சான்று. பாஜக மற்றும் அதிமுக இரண்டும் பினாமி மூலம் போரிடுகின்றன,” என்று கூறி உள்ளார்.
ப.சிதம்பரத்தின் இந்தப் பதிவு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டித் தொகுதியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக தேர்தல் அறிவித்ததும், முதல் கட்சியாக திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவாவை தனது வேட்பாளராக அறிவித்தது. அதற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி டாக்டர் அபிநயாவை வேட்பாளராக அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பியது. கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.சம்பத்தை இதற்காக தேர்வு செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநிலக் கட்சியின் தகுதியை இழக்கும் நிலையில் உள்ள பா.ம.க, இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தைத் தெளிவுபடுத்திய பின்பு, “பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும்,” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதையடுத்து, பா.ம.க. கடைசிக் கட்டமாக ஜூன் 15ஆம் தேதி தனது வேட்பாளராக சி.அன்புமணியை அறிவித்தது.
தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு எதிராக களமிறங்காமல் அதிமுக இந்தத் தேர்தலைத் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தேமுதிகவை இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொள்ளுமாறு அதிமுக கேட்டுக் கொண்டு இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.
இந்த இடைத்தேர்தலைக் காட்டிலும், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்தான் அதிமுகவின் இலக்கு என்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2026ல் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்,” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய அதிமுக மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.