2026 ல் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், சாதி அரசியலில் ஈடுபட்டுள்ளதாக சசிகலா குற்றஞ்சாட்டி உள்ளார்.
இத்தகைய சாதி அரசியலை கட்சித் தொண்டர்கள் யாரும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சாதி அரசியலைத் தானும் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த அவர், அவ்வாறு சாதிக்கு முக்கியத்துவம் அளித்திருந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி முதல்வர் பதவி கொடுக்கப்பட்டிருக்கும் என அவர் கேள்வி எழுப்பினார்.
“அதிமுக தற்போது மூன்றாவது, நான்காவது இடத்துக்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம். அதிமுகவுக்கு இப்போது நல்ல நேரம் வந்துவிட்டது. எனினும் அதிமுகவின் கதை முடிந்துவிட்டது என யாரும் நினைக்க வேண்டாம். தமிழக மக்கள் அதிமுக பக்கம்தான் நிற்பார்கள்.
“என்னுடைய பிரவேசம் தொடங்கிவிட்டது. தொண்டர்களும் மக்களும் என்னுடன் இருப்பதால் எதிர்வரும் 2026ல் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்,” என்றார் சசிகலா.
மிக விரைவில் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் நேரடியாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுகவின் கோரப்பிடியில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்றால் தான் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது என்றார்.
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவல்ல. முக்கிய எதிர்க்கட்சி, தேர்தலைப் புறக்கணிப்பது தவறு. ஆளும் கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்க முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தவறிவிட்டது.
“கோடநாடு வழக்கு ஏன் ஆமை வேகத்தில் நடத்தப்படுகிறது. தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழக முதல்வர் இந்த வழக்கு குறித்து பேசுகிறார். முறையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே… ஆனால் காவல்துறை ஏன் அதைச் செய்யவில்லை. இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்,” என்று சசிகலா மேலும் தெரிவித்துள்ளார்.