போப் – மோடி பட சர்ச்சை: மன்னிப்பு கோரியது கேரள காங்கிரஸ்
ஜி7 மாநாட்டில் போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இறுதியாக போப்புக்கு கடவுளைசந்திக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்ற வாசகத்தை காங்கிரஸ் கட்சி எழுதியிருந்தது.
இதற்கு கேரள பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து, பாஜக கேரள மாநில பிரிவின் தலைவர் கே.சுரேந்திரன் எக்ஸ் பதிவில் கூறுகையில்,“பிரதமர் மோடியை ஆண்டவர் இயேசுவோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி குற்றம் இழைத்துள்ளது. இயேசுவை உயர்வாக கருதும் கிறிஸ்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மரியாதைக்குரிய போப் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தையும் கேலி செய்யும் நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கேரள மாநில காங்கிரஸ் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “எந்த மதத்தையும் அவமதிக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் கிடையாது. அப்படியிருக்கையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளாக போற்றும் போப்பை அவமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எந்தவொரு உண்மையான தொண்டரும் எண்ணமாட்டார்.
ஆனால், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்தநாட்டின் விசுவாசிகளை அவமதிக்கும் மோடியை கேலி செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த கவலையும் இல்லை.
அந்த வகையில் நரேந்திர மோடியின் வெட்கமற்ற அரசியல் விளையாட்டுகளை கேலி செய்வதை போப்பை அவமதிப்பதாக திரித்து சித்தரிக்கும் சுரேந்திரனும், மோடியின் பரிவாரங்களின் வகுப்புவாத சிந்தனையையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். அதனையும் மீறி போப்-மோடி புகைப்பட பதிவு மனதை புண்படுத்துவதாக கருதும் கிறிஸ்தவர்களிடம் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.