சிங்கப்பூரில் குழந்தையைச் சுமந்தபடி நடந்த 38 தந்தையர்

சிங்கப்பூரில் தந்தையர் சிலர் இந்த ஆண்டின் தந்தையர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளனர்.

தங்கள் செல்லப் பிள்ளையைச் சுமந்தபடி இவர்கள் ஜூன் 16ஆம் தேதி சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் நடந்த நடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.

நண்பகல் வேளையில் ஒரு கிலோமீட்டர் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 38 தந்தையர் தங்கள் குழந்தையைச் சுமந்து நடந்தனர்.

ஆக அதிக எண்ணிக்கையில் குழந்தையைச் சுமந்துகொண்டு நடந்த தந்தையர் என்று இந்த முயற்சி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, 2024ஆம் ஆண்டுக்கான டேட்’ஸ் டே அவுட் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நடைபெற்றது.

பிள்ளை வளர்ப்புப் பயணத்தில் விளையாட்டின் மூலம் குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்படித் தந்தையரை இந்த நிகழ்ச்சி ஊக்குவிக்கிறது.

காலாங் வேவ் மால் கடைத்தொகுதிக்கு அருகே உள்ள ஓசிபிசி ஸ்குவேரில் குழந்தையைச் சுமந்து தந்தையர் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தந்தையர் சுமந்து வந்த பிள்ளைகளில் 3 மாதக் குழந்தைகள் முதல் 3 வயது நிரம்பிய பிள்ளைகள் வரை இருந்தனர்.

தந்தையரில் இருவர், முன்பக்கம் ஒரு குழந்தையையும் முதுகில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றனர்.

பிள்ளைகளிடம் உடற்பயிற்சி, வெளிப்புற நடவடிக்கை ஆகியவை மீதான ஆர்வத்தை வளர்க்க தந்தையர்க்கு நல்லதொரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது என்று கூறினார் இதில் ஒரு வயதுக் குழந்தையுடன் பங்கேற்ற திரு மார்க் பர்னபாஸ் லீ, 45.

இந்த நடை நிகழ்ச்சியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்த போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், தந்தையர் பலரும் பிள்ளைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதையும் பிள்ளை வளர்ப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதையும் காண்பது மனமகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

வேலை, குடும்ப வாழ்க்கை என இரண்டின் தேவைகளையும் சிறப்பாகக் கையாள்வது எளிதன்று என்பதை நாம் அறிவோம். இருந்தாலும் பணி முடிந்து வீடு திரும்பும்போது பிள்ளைகளின் மலர்ந்த முகத்தைக் காண்பது ஒரு மாய அனுபவம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர் என்று தாம் நம்புவதாக அமைச்சர் சீ கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button