ரணில்,சஜித் போட்டி; தமிழர் வாக்குகளைப் பெற போலி வாக்குறுதிகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுப்பதில் கட்சிகளுக்கிடையே போட்டியான சூழ்நிலை உருவாகியுள்ளது.எனினும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுமா என்பது பெரும் சந்தேகமே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இந்த போட்டி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் வழங்கப்படும் வாக்குறுதிகள் இந்தப் போட்டியை உருவாக்கியுள்ளது. சஜித் பிரேமதாச கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்த போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கவின் கட்சியின் பேச்சாளர்கள், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் தமிழ் மக்களுக்கு அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளதாக வலியுறுத்தியுள்ளனர்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த முடியாவிட்டால், அரசியலமைப்பில் அந்த சரத்துக்கள் இருப்பதில் அர்த்தமில்லை என வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டாலும் அரசாங்கம் எவ்விதத்திலும் அவற்றுக்கான தீர்வை முன்வைக்கவில்லை. ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களை இலக்குவைத்து 13 ஆவது திருத்தம் தொடர்பான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றமை வழமையான ஒன்றாகவே காணப்படுவதாகவும் ஆனால் அவை நிறைவேற்றப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()