கார்கில் போர் வெற்றியை நினைவு கூறும் ராணுவ வீரர்களின் பைக் பேரணி
பாகிஸ்தானுடனான கார்கில் போர் வெற்றியை நினைவு கூறும் வகையில் ராணுவ வீரர்கள் பங்கேற்ற பைக் (இரு சக்கர வாகனம்) பேரணி தொடங்கியுள்ளது.
இதில் பங்கேற்ற வீரர்கள் ராமேசுவரம் பாலத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை நினைவு கூறும் வகையில் இந்திய ராணுவம் சார்பாக தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் இருந்து டில்லி வரையிலான பைக் பேரணி புதன் கிழமை தொடங்கியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டங்களும் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனுஷ்கோடியிலிருந்து புறப்பட்ட பைக் பேரணியை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தொடங்கி வைத்தார்.
பத்து ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்று சாலை வழியாக 4,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து டெல்லியைச் சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாட்டின் கிழக்கு, மேற்கு மாநிலங்களில் இருந்து ராணுவ வீரர்கள் பைக் பேரணி மேற்கொண்டு டெல்லி சென்றடைகின்றனர்.
அதன் பின்னர் டெல்லியில் உள்ள போர் நினைவகத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தப்போவதாக ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.