இலங்கை

திறந்தவெளி சிறைச்சாலைக்குள் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள்

தமிழர் தாயக நிலப்பரப்பில் ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை சபையின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டது என மனிதவுரிமை செயற்பாட்டாளரும், தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் விபரங்கள் வருமாறு,

தமிழர் தாயகப் பகுதிகளில் அண்மைக் காலமாக பரவலாக தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அடக்கும் வகையிலான இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் நடவடிக்கைகள் உயர்ந்தளவில் தொடர்வதை பரவலாக அவதானிக்க முடிகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையின் பல பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என பல தரப்புக்களால் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடும் அதேவேளை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து பயங்கரவாத அச்சுறுத்தல் திணிக்கப்படுவது ஒருதலை பட்சமான காழ்ப்புணர்ச்சியுடனான மேலாதிக்க தன்மையினை வெளிப்படுத்துகின்றது.

இதன் அடிப்படையில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் , மனிதவுரிமை செயற்பாட்டாளராகவும் உள்ள எமது மக்களின் நலன் சார்ந்தும் உரிமை சார்ந்தும் செயற்படும் எனது செயற்பாடுகளை பயங்கரவாதமாக காட்ட முற்படும் வகையிலான இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தியும் வேதனையையும் அடைந்திருக்கின்றேன்.

கடந்த காலங்களில் ஒரே நாளில் 11 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட அதேவேளை அண்மையில் கூட 7 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டேன். இதன் போது திட்டமிட்டு எனது தொலைபேசியின் முகவரியை கடந்த கால பயங்கரவாத செயற்பாடுகளோடு தொடர்புடைய சகரானின் ஊரான மாவலான முகவரிக்கு மாற்றியமைத்து விசாரணை நடத்துவதற்கான புதிய காரணங்களை செயற்கையாக உருவாக்கி உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலான விசாரணைகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.

மேலும் எமது மக்களின் நலன் சார்ந்து சமூக நோக்கத்திற்காக செய்யப்படும் செயற்பாடுகளை பயங்கரவாத முத்திரை குத்தும் நயவஞ்சக போக்கு நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் அரசியல் இராஜதந்திர அடிப்படையிலான வெளியக தொடர்புகளின் சுதந்திரத்திற்கு தடைபோடும் சொற்பாடுகள் தொடர்பான அதிருப்தியையும் வெளிப்படுத்துகின்றேன்.

இவை தொடர்பாக மனிதவுரிமை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தி இருப்பதோடு ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை சபையின் (UNHRC) கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளேன்.

எனவே தமிழ் மக்களையும் மனிதவுரிமைசார் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் திறந்த வெளி சிறைச்சாலைகளுக்குள் வைத்திருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தி உளவியலால் அரசியல் அடிமைகளாக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு எதிராக குரல் கொடுக்கும் உரிமை எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன்.

மனிதவுரிமை செயற்பாட்டாளர்,

ஒருங்கிணைப்பாளர்- தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.