சந்திரிகா, மஹிந்த, மைத்திரி, கோட்டா ராஜ வாழ்க்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
அவர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து தெளிவுப்படுத்திய விஜித ஹேரத், மக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செலயகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்னிடம் உள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த கேள்விக்கான பதில் இது.
இதில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாவ, பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளின்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்கவிற்கு மாதமொன்றிற்கு ஓய்வுதிய கொடுப்பனவு 97,500 ரூபா, செயலாளர் கொடுப்பனவு 100,000 ரூபா,மாதமொன்றிற்கான எரிபொருள் கொடுப்பனவு மாத்திரம் 5,00,000 ரூபா வழங்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு 97,500, செயலாளர் கொடுப்பனவு 100,000 ரூபா, மற்றும் எரிபொருள் கொடுப்பனவு 704,100 ரூபாவாகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஓய்வுதிய கொடுப்பனவு 97,500, செயலாளர் கொடுப்பனவு 100,000 ரூபா, மற்றும் எரிபொருள் கொடுப்பனவு 704,100 ரூபாவாகும்.
அதே போல் மக்களால் வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐந்து வருடங்கள் பதவியில் இருக்கவில்லை. சரியாக கூறினால் 2 வருடங்களும் 4 மாதங்களில் சேவையை கைவிட்டுச் சென்றார். மக்களிடம் அறிவிடப்பட்ட வரி அவ்வாறானதொரு ஜனாதிபதியை பாதுகாப்பதற்கு செலவிடப்பட்டுள்ளது.
கோட்டாவிற்கு 97,500 ரூபா ஓய்வுதிய கொடுப்பனவாகவும், செயலாளர் கொடுப்பனவாக ஒரு லட்சமும் எரிபொருள் கொடுப்பனவாகவும் 704,100 ரூபா மக்களின் பணம் செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் பொதுமக்களின் பணத்தை இந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வீணடித்துள்ளார்கள் என்று பார்த்தீர்களா? தனிப்பட்ட வாழ்க்கையை நடத்துவதற்காக இந்த மக்களின் பணம் வீண்விரயம் செய்யப்படுகிறது.
அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப் பெற வேண்டும் என கூறி 06 அல்லது 07 கோடிக்கு வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சர்கள் பலர் ஊக்குவிக்கின்றனர்.
நாடு கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் ஆட்சியாளர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் செலவு அதிகரித்து நாடு மேலும் பொருளதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது.