குழந்தைகளை கூலிகளாக்கும் அவலம்: எவ்வாறு ஒழிக்கப் போகிறோம்?
கனவுகளாலும் ஆசைகளாலும் நிறைந்தது சிறுவர்களின் உலகம். நன்றாக படிக்க வேண்டும், நண்பர்களுடன் விளையாட வேண்டும், சுதந்திரமாக சுற்றித்திரிய வேண்டுமென சிறுவர்கள் தூக்கத்திலும் கனவு காண்கிறார்கள்.
இப்படிப்பட்டதொரு நிலையில், அவர்களது கனவுகளையெல்லாம் கலைத்து, ஒரு குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமைகளையும் சுமக்க வேண்டும் என்றால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை.
இவ்வாறே வெறும் 11 வயதேயான சிறுவன் ஒருவன் தனது கனவுகளையும் ஆசைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான சம்பவமொன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
தமது நண்பர்கள் பெற்றோரின் கையால் உணவு உண்டுவரும் நிலையில், இந்தச் சிறுவன் தன் கையால் சமைத்த உணவை தன் பெற்றோருக்கு ஊட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
காலி – போகஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை நோய்வாப்பட்டு படுக்கையில் இருக்க அத்தனை பொறுப்புகளும் இவன் தலையில் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வயதில் எதிர்கொள்ள முடியாத அத்தனை சவால்களையும் எதிர்கொள்ளும் குறித்த சிறுவன் பொறுப்புடன் கல்வியையும் தொடர்ந்து வருகிறார்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வயதுக்கு மீறிய பொறுப்புகளை ஏற்றுள்ள இந்த சிறுவனின் கதை ஒருபுறமிருக்க, பல சிறுவர்கள் வலிந்து தொழிலாளிகளாக மாற்றப்படும் அவலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சிறுவர்களின் பிஞ்சுக் கரங்களில் கடினமான வேலைகளைச் செய்வதற்கு கட்டாயப்படுத்துவது முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகெங்கும் அழுத்தமான குரல் எழுப்பப்படுகிறது.
மக்களும் அரசாங்கமும் கவனம் செலுத்தி சமூக நீதிக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொடர்பை அங்கீகரித்தால் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் குழந்தைத் தொழிலாளர் முறைமை இலங்கை அரசியலைப்புச் சட்டத்தில் ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், சமுகத்தில் அதன் எச்சங்கள் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.
விவசாயம் முதல் மீன்பிடி, புடவைத்தொழில், சுரங்கம், வீட்டு வேலை, வியாபாரம், கட்டிடத்தொழில் மற்றும் யாசகம் பெறுதல் என அனைத்து துறைகளிலும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.
அதுமட்டுமல்லாது வேலைக்கமர்த்தப்படும் சிறுவர்கள் பரிதாபமாக மர்மமான முறையில் மரணத்தை தழுவும் சாபக்கேடும் ஓயவில்லை.
சுமதி, ஜீவராணி, லிங்கேஸ்வரி, குமுதிலி, நந்தினி அண்மையில் இஷாலினி என இறப்பு பட்டியல் நீள்கிறது.
இந்தப் பட்டியல் எதிர்காலத்தில் இன்னும் நீளக்கூடாது, நீளவிடக்கூடாது.
நமது கடமைகளை நிறைவேற்றுவோம் : குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் இம்முறை உலகக் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டும் என்பதே சிறுவர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பு.