வெறும் கதிரைகளுடன் பேசிய நாமல்: அதிர்ச்சியடைந்த மஹிந்த, பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்துள்ளதாகவும் கருத்து முரண்பாடுகள் முற்றியுள்ளதாகவும் அண்மைய சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அக்கட்சிக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில் இருந்து நாமல் ராஜபக்ச தரப்பு ஒதுங்கிச் செயல்படுவதாகவும் அவர்கள் வர்த்தகர் தம்பிக்க பெரேராவை வேட்பாளராக முன்நிறுத்த வேண்டும் அல்லது நாமலுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கோருகின்றனர்.
கட்சிக்குள் முற்றும் முரண்பாடு
என்றாலும், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர உள்ளிட்டோரும் செஹான் சேமசிங்க, மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட பல சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக முன்னிறுத்த ஆதரவளிக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.
இதனால் ரணிலுக்கு ஆதரவான தரப்புக்கு பொதுஜன பெரமுனவின் மாவட்டக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் சில ரகசிய கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக அவர்களின் ஆதரவாளர்கள் நாமல் உட்பட அவர்களது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு வருவதில்லை.
கடந்த சனிக்கிழமை ரத்தொட்ட பஸ் நிலையத்துக்கு முன்பு இடம்பெற்ற கூட்டமொன்றில் வெறும் கதிரைகளுடன் நாமல் பேசிக்கொண்டிருந்ததாக சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கட்சிக்குள் நிலவு உட்கட்சி பூசலை வெளிப்படையாக புடம்போட்டுக் காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சமாதானப்படுத்த முயற்சி
பொதுஜன பெரமுனவில் உள்ள நாமலில் ஆதரவாளர்கள் இம்மாதத்தின் இறுதிவாரத்தில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இவர்களது செயல்பாடுகள் காரணமாக இதனால் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கட்சிக்குள்ளும் சு.கவிலும் ரணிலுக்கு ஆதரவான நிலை உருவாகியுள்ளதால் இத்தருணத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டால் அரசியல் ரீதியாக பல்வேறு சரிவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் நாமல் தரப்பை சமாளிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.