தேர்தல் ஒத்திவைக்கப் படுமானால் ஐ.தே.க.வுக்கு அது இறுதிக் காலம்
ஜனாதிபதித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமாக இருந்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிக் காலமாகவே இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் தேர்தலை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்புக்கமைய தேர்தலை நடத்தாது இருக்க முடியாது. அவ்வாறு தேர்தல் ஒத்திவைத்து முட்டாள்தனமான வேலையை செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிக்காலமாகவே இருக்கும் என்றார்.
இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்றும், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறுகையில்,
எமது வேட்பாளரை நேரத்திற்கு அறிவிப்போம். எங்களிடம் இருந்து சென்றார்கள் என்பதற்காக எங்களுக்கு எந்த குறையும் கிடையாது. சென்றவர்கள் வருவார்கள். மொட்டு வெற்றிபெறும் என்றார்.