மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் மூலம் தமிழ் பொலிஸை உருவாக்கக் கூடாது
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் அவசியமற்றதே, இதனால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைக்கும் போது பொறுப்புத் தன்மையுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போன்றோரை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய குடியரசு முன்னணி தலைவரான எதிர்க்கட்சியின் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் தமிழ் பொலிஸை உருவாக்கக் கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.
தனது கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் நெருங்கும் போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக சிலர் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் மட்டுமே வழங்கப்படாது உள்ளது. காணி அதிகார விடயத்தில் தேசிய காணி ஆணைக்குழு அமைக்கப்படவில்லை என்றாலும் மாகாண சபையின் அனுமதி இன்றி அரச காணிகளை வடக்கில் மட்டுமன்றி எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.
இந்நிலையில் தெற்கில் இருந்து வடக்கில் குடியேற்றங்கள் இடம்பெறுவதால் தமிழ் இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே காணி அதிகாரம் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன. ஆனால் அப்படி தெற்கில் இருந்து வடக்கிற்கு போவதாக தெரியவில்லை. வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் குடியேறுவதுதான் நடக்கின்றது.
இதேவேளை பொலிஸ் அதிகார விடயத்தில் இந்தியாவில் இருந்து வந்த யோசனையே அது. அந்த திருத்தத்தை கொண்டுவரும் நேரத்தில் இருந்த போராட்ட காலத்தில் தமிழ் இளைஞர்கள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் போராட்டக்காரர்களுக்கு சிங்கள பொலிஸாரே தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் 1987 இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின்னர் அந்த சிங்கள பொலிஸார் தெற்கிற்கு வந்து தெற்கில் ஒடுக்குமுறைகளை செய்தனர். இதன்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த அதுலத்முதலி வடக்கிற்கு சென்று துப்பாக்கி சூடுகளுக்கு இலக்காவதற்கும் தெற்கிற்கு வந்து நாயாவதற்கும் ஶ்ரீலங்கா பொலிஸாருக்கு முடியாது என்று கூறினார். அதன்போது பொலிஸார் தொடர்பான நிலைப்பாடு திடீரென மாறியதால் தெற்கில் ஒடுக்குமுறைகள் ஆரம்பமானது.
இதன்போதே பொலிஸ் சுயாதீனமாக வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்தன. இதன்படி பொலிஸ் அதிகாரத்தை வழங்கி மாகாணங்களுக்கென தனித் தனியாக பொலிஸாரை உருவாக்க முடியாது. பொலிஸ் சேவைக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என்றும், சுயாதீனமாக இருக்க வேண்டும். தமிழ் பேசுபவர்களும் இருக்க வேண்டும் என்றும் போட்டி அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் மாகாண பொலிஸை உருவாக்கினால் பிரச்சினைகள் பல ஏற்படும் என்பதுடன் இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கபப்டாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை தாம் முன்வைக்கும் விடயங்கள் தொடர்பில் சஜித் பிரேமதாச மட்டுமன்றி அனைவரும் பொறுப்புடன் கதைக்க வேண்டும். அவ்வாறானவை கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. சிங்களம் மட்டும் என்றும், தமிழும் சிங்களமும் என்றும் கூறியுள்ளனர். தேர்தல் நெருங்கும் போது இவ்வாறு கூறுவர். இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.
எவ்வாறாயினும் மாகாண பொலிஸ் அவசியமற்றது. இதனால் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. புதிய பிரச்சினைகளே ஏற்படும். சுயாதீன பொலிஸே இருக்க வேண்டும். அதில் தமிழ் பேசுபவர்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் பொலிஸை ஏற்படுத்துவதல்ல என்றார்.