இந்தியா

“திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை” … தமிழச்சி தங்கபாண்டியன்.

தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும் என்றும் நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது என்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அப்படியில்லை தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார். ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை – அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும். தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும். இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது. ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்.
தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது. அதனால்தான் இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது என தமிழச்சி தங்கபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.