உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 3-வதுமுறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளத்தில், “தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இத்தாலியையும் இந்தியாவையும் இணைக்கும் நட்புறவை வலுப்படுத்தவும் நம்மை பிணைக்கும் பல்வேறு பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம்தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்பது உறுதி” என பதிவிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலுவவுதை வெளிப்படுத்துவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. மிக நெருங்கிய பக்கத்து நாடு என்ற வகையில், இந்தியாவுடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இலங்கை ஆர்வமாக உள்ளது” என கூறியுள்ளார்.
மாலத்தீவுகள் அதிபர்: மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு விடுத்துள்ள செய்தியில், “இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகள். நம் இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என கூறியுள்ளார்.
இணைந்து பணியாற்ற விருப்பம்: சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். இரு நாடுகள் மற்றும் மக்களின் நலனுக்காகவும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என கூறியுள்ளார்.
இதுபோல நேபாள பிரதமர் பிரசண்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் உள்ளிட்ட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.