மோடியை கைவிட்ட ராமர் கோவில்: உத்தரப்பிரதேசத்தில் பாஜக தோல்வி கண்டது எப்படி?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பாஜக கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேர்தல் முடிந்த பின்னர் வெளியான கருத்துக்கணிப்பில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக அமைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கோட்டையான கருதப்பட்ட உத்தரப்பிரதேசத்திலும் நிலைமை வேறு மாதிரியாக அமைந்தது.
80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றிய பாஜக நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 33 தொகுதிகைளை மட்டுமே கைப்பற்றியது.
இது கட்சிக்குள் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் தொடங்கும் முன்னர் வேட்பாளரை தெரிவு செய்வதில் இருந்தே பாஜகவுக்குள் குழறுபடிகள் ஏற்பட்டன.
பல முக்கியஸ்தர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன், பிராமணர்கள், ராஜ்புத் மற்றும் ஓபிசி வாக்கு வங்கி அரசியல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
குறிப்பாக, ராஜ்புத் வம்சத்தினர் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பது என தீர்மானமே நிறைவேற்றினார்கள். இதன் பின்னணியிலேயே, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.
அங்குள்ள கிராமபுறங்களில் போதிய வளர்ச்சியில்லை என்ற குற்றச்சாட்டுகளும், முஸ்லிம்களுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கையும் பாஜகவுக்கு எதிராக திரும்பியிருந்தது.
இந்துத்துவா கொள்கையை கையிலெடுத்துள்ள பாஜகவுக்கு, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியிலும் படு தோல்வியே கிடைத்துள்ளது.
யாதவ் பெல்ட் என்று கூறப்படும் பகுதிகளிலும் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை எனக் கூறப்படும் கிழக்கு உத்தரபிரதேசத்திலும் பாஜக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்த சமாஜ்வாதி கட்சி பாஜகவை விட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றதுடன், தேசிய அளவில் பாஜக, காங்கிரஸூக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சியாகவும் மாறியது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியை பிரதமர் மோடி மிகவும் புகழ்ந்து பேசியிருந்தார்.
எனினும், வேலையின்மை, பணவீக்கம், கிராமப்புறங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், ஜனவரியில் திறக்கப்பட்ட ராமர் கோயில் பாஜகவுக்கு கைகொடுக்க மறுத்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயங்களை எல்லாம் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அங்கு அதிகளவான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 2027 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு பாரிய உந்து சக்தியாக அமையும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.