கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் (வயது 71). இவர் மீது பணமோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஒரு ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து போலீசார் கடந்த ஆண்டு மே மாதம் 9-ந்தேதி இம்ரான்கானை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் ராவல்பிண்டியில் ராணுவ தலைமையகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதனால் வன்முறையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கலவரத்தை தூண்டியதாக இம்ரான்கான் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
அதேசமயம் ஊழல் குற்றச்சாட்டு உறுதியாகி அவர் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே அந்த வழக்குகளில் அவர் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.