சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் – சரத் வீரசேகர
இலங்கைக்கு எதிரான ஜெனீவா வெளிக்கள விசாரணை பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தின் பதிலளிப்புக்கள் திருப்திகரமாக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர, இது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜெனீவாவில் 46/1 பிரேரணைக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெளிக்கள பொறிமுறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பவுள்ளது.
யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சிகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளே குறித்த வெளிக்கள பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 46/1 பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் உலக நாடுகளிடம் கலந்தாலோசித்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றால் அவர்களை வெளிநாடுகளில் கைது செய்யக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. அது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
அமெரிக்க தூதுவர் வடக்கிற்கு சென்று முன்னாள் போராளிகளை சந்தித்துள்ளார். தூதுவருக்குரிய நடவடிக்கைகக்கு அப்பால் சென்று இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அவர் தலையிடுகின்றமை தொடர்பில் நான் பகிரங்கமாக விமர்கின்றமையால் பொய்யான காரணிகளை முன்வைத்து எனக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக, அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர்கள் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பினை வெளியிடுகின்றன.
அமெரிக்காவின் காங்ரஸ் கட்சி இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் இணைந்து அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் அமெரிக்கர்களின் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் குழு மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவையே இதற்கான அழுத்தத்தினை பிரயோகித்துள்ளன. இவை எல்.டி.டி.யின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
ஈழ தமிழ் மக்களுடன் இராஜதந்திர தொடர்புகளை பலப்படுத்த வேண்டும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களின் சுய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து அமெரிக்க காங்ரஸ் இலங்கைக்கு எதிரான பிரேரரணையை தயாரித்து வருகிறது. இது மிகவும் பாரதூரமானதாகும். இந்த 3 அமைப்புக்களுக்கும் இலங்கைக்குள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றார்.