குடிபோதையில் பேருந்தை கடத்திய நபர் : பதற்றத்தில் தவித்த பயணிகள்
கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட தனியார் பயணிகள் பேருந்தொன்று கடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் உணவருந்தச் சென்ற போது குடிபோதையில் நபர் ஒருவர் பேருந்தை இயக்கி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநபர் ஒருவர் பேருந்தில் ஏறி அதை இயக்கி ஓட்ட ஆரம்பித்ததாகவும் மற்ற பயணிகள் பயந்து அலறியதாகவும் குறி்பிடப்படுக்கின்றது.
கடத்தப்பட்ட பேருந்து
கொழும்பு (Colombo) மற்றும் திருகோணமலை (Trincomalee) மூதூருக்கு இடையில் இயங்கும் இந்த தனியார் பயணிகள் பேருந்து மூதூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது நேற்று இரவு 12:00 மணியளவில் பலால வெவ ஹோட்டலுக்கு அருகில் உணவுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட சிலர் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்குச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்போது, இப்பன்கட்டுவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
துரத்தி சென்ற காவல்துறையினர்
இந்த நிலையில், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர் ஹோட்டலை விட்டு வெளியேறி பேருந்தில் ஏறி அங்கிருந்த சாவியுடன் பேருந்தை இயக்கியுள்ளார்.
அத்துடன், பயணிகளுடன் பேருந்துடன் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்ததோடு இதனை கண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, குடிபோதையில் இருந்த நபர் இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்தறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அதற்குள் பேருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் சென்றதாகவும் பயணிகள் மரண பீதியில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.