ஆம்ஆத்மிக்கு ஆதரவளிக்கும் மக்கள் பாகிஸ்தானியர்களா?: கொதிக்கும் கெஜ்ரிவால்
ஆம்ஆத்மிக்கு ஆதரவளிக்கும் மக்களை பாகிஸ்தானியர்கள் எனக் கூறும் அமித்ஷா, மோடியின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் மக்களை துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்த ஆரம்பித்துள்ளார்,” என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
காணொலி வாயிலாக அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: நாட்டில் லோக்சபா தேர்தல் 5 கட்டங்கள் முடிந்து, அடுத்த இரு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஜூன் 4ல் தேர்தல் முடிவுக்கு பின்னர், மோடி அரசு விலகி இண்டியா கூட்டணி கூட்டாட்சி அமைக்கும். ஜூன் 4ல் இண்டியா கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். நேற்று டில்லியில் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 500க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானியர்களா
டில்லிக்கு வந்த அமித்ஷா, நாட்டு மக்களை பற்றி அத்துமீறி பேச ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, ஆம்ஆத்மிக்கு ஆதரவளிக்கும் மக்களை பாகிஸ்தானியர்கள் என்றும் பேசியுள்ளார். டில்லி மக்கள் எங்களுக்கு 62 இடங்களும், 56 சதவீத ஓட்டுகளையும் கொடுத்து எங்கள் அரசை அமைத்துள்ளனர். அப்படிப்பட்ட, டில்லி மக்கள் பாகிஸ்தானியர்களா? பஞ்சாப் மக்கள் எங்களுக்கு 117 இடங்களில் 92 இடங்களை கொடுத்துள்ளனர். பஞ்சாப் மக்கள் பாகிஸ்தானியர்களா?
மோடியின் வாரிசு
குஜராத், கோவா, உத்தரபிரதேசம், அசாம், மத்திய பிரதேசம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் எங்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் அளித்தனர், இந்த நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தானியர்களா? பிரதமர் மோடி உங்களை (அமித்ஷா) வாரிசாக தேர்ந்தெடுத்துள்ளார்.
அதனால் நீங்கள் பெருமைப்பட்டுக்கொண்டு மக்களை துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்த ஆரம்பித்துள்ளீர்கள். நீங்கள் இன்னும் பிரதமர் ஆகவில்லை, இவ்வளவு திமிர் பிடித்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் பிரதமராகவே முடியாது; ஏனெனில், ஜூன் 4ம் தேதி மக்கள் பா.ஜ., ஆட்சியை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.