இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்கள்: புலனாய்வுத் துறை தீவிர விசாரணை
இந்தியா (india) – குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் கூறப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பிலும் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் இந்திய – குஜராத்தில் (Gujarat) உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் (sardar vallabhbhai patel airport) வைத்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு
குறித்த சந்தேக நபர்கள் இந்திய (India) காவல்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அகமதாபாத்திற்கு (Ahmadabad) வந்த நோக்கத்தை கண்டறியும் வகையில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர்
இந்நிலையிலேயே, கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (isis) வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கூடுதல் தகவல்களை கோரியுள்ளனர்.
இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.