முச்சந்தி

​ உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப் படைகள்: உலகை உலுக்கும் தனியார் ராணுவங்கள்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

கூலிப்படைகளால் உக்ரைன்-ரஷ்ய யுத்த களத்தில் மேலும் ஒரு புதிய ஆபத்தின் வளர்ச்சி போக்கை வெளிப்படுத்தி உள்ளது. அதுதான் தனியார் ராணுவ கூலிப்படைகளின் எண்ணிக்கை வளர்ச்சியாகும்.
அண்மையில் ரஷ்ய – உக்ரைன் மோதலில் இலங்கையின் பதினாறு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தனியார் ராணுவ கூலிப்படைகளுக்கு வன்முறைகள் ஒருபொருட்டே இல்லை. கொடூரங்களை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு மீதம் இருக்காது. அதிக கூலி, அதிக கொடுமைகள் என்ற கோட்பாட்டில்தான் இந்த தனியார் ராணுவப்படைகள் செயல்படுகின்றன.
இலங்கை இராணுவ கூலிப் படைகள்:
இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் உக்ரேனிய எல்லையிலுள்ள போர்க்களங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க்( Donetsk ) போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்ய போர்களங்களிற்கு இலங்கையில் ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது. இதேவேளை அங்கே போக ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு வீசாவுடன் கிடைப்பதாக, அடுத்த சில நாட்களில் அவர்கள் உக்ரேனிய எல்லைகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை கியுபா போன்ற இலத்தீன் நாடுகளில் இருந்தும் பெருமளவு கூலிப்படையினர் ரஷ்யாவில் காணப்படுகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – நேபாள கூலிப்படைகள்:
உக்ரைனில் தனியார் ராணுவ கூலிப்படையில் சேர்வதற்கு உலகம் முழுவதும் இருந்து பலர் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. குறிப்பாக இந்தியா, நேபாள நாட்டிலிருந்து ஏராளமான இளைஞர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், இத்தகைய தன்னார்வ இராணுவ குழுவில் சேர்கிறார்கள் என்று ஓர் செய்தி வெளிவந்துள்ளது.
அவ்வாறு சேரக்கூடிய வீரர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்ற சலுகை இருப்பதாகவும் அதனால், மேலும் பலர் சேருகிறார்கள் என்றும் தெரிகிறது.
நேபாள அரசு இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம், நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற வகையில் கையை விரித்துக் கொண்டார்கள்.
இந்திய அரசு, நேபாள வீரர்களை ராணுவத்தில் எடுப்பதை நிறுத்திவிட்டது மட்டுமல்ல, அக்னி பாத் என்ற பெயரால் நிரந்தர ராணுவ பணியை ஒழித்துக் கட்டியதும் இதற்கு முக்கிய காரணம் என்றும் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் இதுபோன்ற அண்டை நாடுகளில் இணைவது இந்தியாவுக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய வாக்னர் கூலிப் படைகள்:
முன்பு ரஷ்யாவில் இயங்கிய தனியார் ராணுவப் கூலிப்படையான வாக்னர் குழுவும் (Wagner Group), உக்ரைன் யுத்தத்தில் தீவிரமாக களமாடியது. ஆனால் 2023 ஜூனில் தளபதி எவ்கேனி பிரிகோஷின் யுத்த களத்தில் இருக்கும் போது ரஷ்ய இராணுவ தலைமைக்கு எதிராக கலகத்தை ஆரம்பித்தார்.
ஆயினும் 24 மணி நேரத்தில் அவர் அறிவித்த கலகம் முடிவுக்கு வந்தது.
வாக்னர் குழுவின் கலகத்தை ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் மக்களுக்கு எதிரான தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டி, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும், மரண தண்டனை உட்பட சட்ட ரீதியான அனைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
உடனடியாக பிரிகோஷின் தனது கலகத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். யுத்த காலத்தில் இது ஒரு மோதலாக மாற வேண்டாம், அப்படிப்பட்ட மோதல் உக்ரைன் யுத்தத்திற்கு ரஷ்யாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பின்புலத்தில் அவர் மீதான சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைய அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் டூலா (Tula) நகர விமான விபத்தில் கொல்லப்பட்டார். இந்த கலகத்தை அடுத்து விளாடிமிர் புடின் ரஷ்ய ராணுவத்தை ஒன்றுபடுத்தி இருப்பதுடன், மக்களின் ஆதரவையும் அதிகப்படுத்தி இருப்பதாக கள நிலவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ‘பிளாக் வாட்டர்’ கூலிப் படைகள்:
பனிப்போர் முடிந்த பிறகு அமெரிக்க தலைமையிலான தனியார் ராணுவ கூலிப்படைகள் எண்ணிக்கை மிக அதிகமாக பெருக்கப்பட்டது.
அமெரிக்காவில் பிளாக் வாட்டர் என்று சொல்லக்கூடிய தனியார் கூலிப்படை ராணுவம் தான் உலகத்தில் பெரியது. முன்னாள் ராணுவ அதிகாரி எரிக் பிரின்ஸ் என்பவரால் இக்கூலிப்படை ஆரம்பிக்கப்பட்டது.
நூறுக்கும் மேற்பட்ட தனியார் ராணுவ கூலிப்படைகள் அமெரிக்காவில் செயல்படுவது தெரிய வருகிறது. G4S என்ற தனியார் ராணுவ கூலிப்படை அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 125 நாடுகளில் கிளை வைத்துள்ளது.
2006 முதல் 2008ஆம்ஆண்டு வரை அமெரிக்க தொழிலாளர்கள் மீது தாக்குதலுக்கும் அமெரிக்கா தலையீடுகள் செய்யக்கூடிய நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் இந்த கூலிப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கிற பொழுது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பாதுகாப்பு அளிப்பதற்கான பொறுப்பு இந்த கூலிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போதுதான் அதிகமான அளவு கூலிப்படைகள் பயன்படுத்தப் பட்டன. பிளாக் வாட்டர் படை அதிக பங்கை இந்த இருநாடுகளிலும் செய்தது. 2003 ஆம் ஆண்டு ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க ஆதரவு ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் இவர்கள்தான் பயிற்சி கொடுத்தார்கள்.
2020 ஆம் ஆண்டு மட்டும் தனியார் ராணுவ கூலி படைகளுக்கான
அமெரிக்காவின் முதலீடு 224 பில்லியன் டாலர் ஆகும். ஆனால்
2030 ஆம் ஆண்டு இது 457 பில்லியன் டாலர் அளவிற்கு உயரம் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.
அனேகமாக ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக தனியார் ராணுவ கூலிப்படைகளும் இன்றைய தினம் உருவாகிவிட்டது அல்லது உருவாக்கப்பட்டுள்ளது என்றே கருதலாம்.
ஈராக்கில் அமெரிக்க கூலிப்படை:
அமெரிக்காவின் பட்ஜெட்டில் 2001 ஆம் ஆண்டு கூலிப்படைக்கு 7, 35,000 டாலர் ஒதுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டில் 25 மில்லியன் டாலர்களாகவும் 2006 ஆம் ஆண்டு 600 மில்லியன் டாலர்களாகவும் இந்த பிளாக் வாட்டர் தனியார் ராணுவ கூலிப்படைக்கு ஒதுக்கப்பட்டது.
சராசரி ஒரு அமெரிக்க ராணுவ வீரனுக்கு தினசரி ஒதுக்க கூடிய தொகை 150 டாலரில் இருந்து 190 டாலர் வரை தான். ஆனால் இந்த கூலிப்படைக்கு தினசரி அமெரிக்க பட்ஜெட் ஒதுக்கியது 1200 டாலர்களாகும்.
ஈராக் நாட்டில் தூசூர் நகரத்தில் 17 பொதுமக்களை விசாரணையின்றி தூக்கில் போட்டார்கள். இதுபோன்ற எண்ணற்ற கொடூர செயல்களை இந்த கூலிப்படை ஈராக்கில் செய்தது.
ஈராக்கில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களையும் பொது மக்களையும் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். ஆயுதக் கடத்திலிலும் கள்ளச்சந்தையில் ஆயுத விற்பனையிலும் மிக முக்கிய பங்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தனது பெயரை அகாடமி என்று மாற்றிக் கொண்டது.
வேறுசில பணிகளையும் செய்வதற்கான ஒப்பந்தங்களை எடுத்து தங்களுடைய கூலிப்படை குற்ற செயல்களை மறைத்துக் கொண்டார்கள். மற்ற நாடுகளில் அமெரிக்க ஆதரவு ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பது, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், ஈராக் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்று பணிகள் ஒதுக்கப்பட்டது.
ஆப்கானில் அமெரிக்க கூலிப்படை:
மற்றொரு தனியார் ராணுவ கூலிப்படை டைன் கார்ப் (Dyn Corp) ஆகும். இதில் 24 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்திற்கும், ஈராக்கிற்கும் இந்த கூலிப் படையிலிருந்துதான் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் அனுப்பப்பட்டார்கள்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ போன்ற நிறுவனங்கள் தனது பாதுகாப்பிற்கு 50 சதவீதம் இந்த தனியார் ராணுவ கூலிப்படையை நம்பித்தான் இருக்கிறது.
இந்தப் கூலிப்படை கிழக்கு ஐரோப்பாவில் போஸ்னியா நாட்டில் 2000ம் ஆண்டில் நடைபெற்ற யுத்தத்தை ஒட்டி அனுப்பப்பட்ட பொழுது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பெண்களையும் குழந்தைகளையும் விற்பனை செய்தது. ஆதாரப்பூர்வமாக பல புகார்கள் வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.
போஸ்னியாவில் கொடூரம்:
2001 ஆம் ஆண்டு ஈக்வடார் நாட்டில் விவசாயிகளின் பயிர்கள் மீது களைக்கொல்லி மருந்துகளை திருட்டுத்தனமாக வீசி விவசாயத்தை நாசம் செய்யும் பணிகளை இந்த கூலிப்படை நிறைவேற்றியது. இவர்கள் ஆப்கான் நாட்டில் இருந்த பொழுது குழந்தை விபச்சாரத்தை நடத்தினார்கள் என்றும் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதே வேளை எம்.பி.ஆர்.ஐ என்ற அமெரிக்க தனியார் ராணுவ கூலிப்படை 1995இல் குரோஷியா நாட்டில் இன அழிப்பு கொடுமைகளில் ஈடுபட்டது. அல்பேனியா நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்தி ஆட்சி கவிழ்ப்புக்கு இந்த படை உறுதுணையாக இருந்தது.
 ஆப்கானிஸ்தான் மற்றும் போஸ்னியா நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு என இருந்த படைப்பிரிவுக்குள் நுழைந்து சிஐஏ வழிகாட்டி அடிப்படையில் செயல்பட்டார்கள்.
பிரித்தானிய எர்னிஷ் இன்டர்நேஷனல் கூலிப்படை:
‘ஏஜிஎஸ் டிபன்ஸ் சர்வீஸ்’ (AGS Defence Services )என்ற தனியார் ராணுவ கூலிப்படை இங்கிலாந்தில் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது.
யுத்தம் நடைபெற கூடிய இடங்களில் தூதரகங்களை பாதுகாக்கும் பொறுப்பை இந்த கூலிப்படை ஏற்றுக் கொண்டது. இங்கிலாந்தில் எர்னிஷ் இன்டர்நேஷனல் என்ற தனியார் ராணுவ கூலிப்படை ஈராக் நாட்டிற்கு அனுப்பப்பட்டு ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் கைதிகளை சித்தரவதை செய்யும் செயல்களில் ஈடுபட்டது.
அதிகமாக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தனியார் ராணுவப் படை என்று குற்றச்சாட்டுக்கும் ஆளானது.
அதேவேளை நார்த் பிரிட்டிஷ் சர்வீஸ் (North British Services) லிமிடெட் என்ற தனியார் ராணுவப்படை பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டு அமெரிக்க தனியார் ராணுவ படையுடன் இணைந்து டொமினிகள் குடியரசில் பதிவு செய்தார்கள். இந்த தனியார் ராணுவ கூலிப்படை தற்போது உக்ரைனுக்கு அதிகமான கூலிப்படைகளை அனுப்பி உள்ளது.
இந்தக் கூலிப்படையில் மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும், பிரான்ஸ், அமெரிக்காவை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
2003 ஆம் ஆண்டில் ஆபிரிக்காவில் உள்ள லைபீரிய நாட்டில் அரசுக்கு எதிரான கலவரங்களுக்கு இந்த படை அனுப்பப்பட்டு உதவி செய்து அந்த அரசை தூக்கி எறிய கூடிய வேலையை முடித்தது, அந்நிய நாட்டுக்குள் புகுந்து அப்பட்டமான முறையில் அரசுக்கு எதிரான செயல்களில் இறங்கினார்கள்.
அந்த நாட்டின் ஜனாதிபதியை சிஐஏ கடத்திச் செல்வதற்கு சிறப்பு திட்டத்தை தயாரித்துக் கொடுத்தவர்கள் இந்த கூலிப்படையை சேர்ந்தவர்கள்தான், ஐநா சபையின் தலையிட்டால் அது நடைபெறவில்லை.
ஆட்கடத்தலில் சிரேஷ்ட இராணுவ அதிகாரி்கள் :
ரஷ்ய உக்ரைன் போரில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் பலர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை இராணுவத்தில் பொது மன்னிப்புக்காக சுமார் 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 357 ஆக காணப்பட்டது. அத்துடன் சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து விலகி மீண்டும் பணிக்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை 799 என அறிவிக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி அங்கவீனமடைந்த அல்லது யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு 55 வயது வரையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் பல முன்னாள் இராணுவ வீரர்கள் கூலிப்படையாக அனுப்பப்படுவதற்கு, அரசின் உயர் அதிகாரிகளும் பொறுப்பு என்றே கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *