செய்திகள்

இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு! …. அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட வரலாற்று தீர்மானம்!!

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், வரலாற்று தீர்மானம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றில் முன்வைத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸின் 7 உறுப்பினர்களுடன் இணைந்த நிலையில் அதன் ஒரு உறுப்பினரான வைல்லி நிக்கலினால் (Wiley Nickel )இலங்கையின் மோதலுக்கு ஒரு தீர்வாக ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த முக்கிய தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

H-RES 1230 என அழைக்கப்படும் இந்த தீர்மானம், ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.

அத்துடன் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியில் நிரந்தர தீர்வைக் காண தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுக்கிறது.

இலங்கையில் இனப்போர் முடிவடைந்த 15வது ஆண்டு நிறைவை ஒட்டிய இந்த தீர்மானம், தீவில் சிங்களவர்களும் தமிழ் மக்களும் தனித்தனியான இறையாண்மையை கொண்டிருந்த காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தை நினைவுபடுத்தியுள்ளது.

1833 இல் ஆங்கிலேயர்கள், ஒற்றை ஒற்றையாட்சி நிர்வாகத்தின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் பிரதேசங்களை இணைத்ததை இந்த தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, சுதந்திரமான, இறையாண்மையுள்ள, மதச்சார்பற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக, 1976 தமிழர்களின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமெரிக்க தீர்மானம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழர்களுடன் எந்த ஆலோசனையும் இன்றி கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படையில், தமிழர்களின் அபிலாசைகளுக்கு அது தீர்வாக அமையாது என்று தமிழர்களின் தலைவர்கள்,அதனை நிராகரித்ததையும் இந்த தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் 6வது திருத்தம் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகவும், தமிழர்களின் தாயகம் சுயராஜ்யமற்ற பிரதேசமாகவே உள்ளது என்றும் தீர்மானம் கூறுகிறது.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறைமுகமாக அங்கீகரித்ததை இந்த தீர்மானம் மேற்கோள் காட்டியுள்ளது.

திமோர், பொஸ்னியா, எரித்திரியா மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளில், அந்தந்த மோதல்களைத் தீர்ப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் சுதந்திர வாக்கெடுப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் தீர்மானத்தின் முதன்மைக் கோட்பாடுகளாக 1. ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்காவை வலியுறுத்துதல் 2. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுமாறு அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்துதல் 3. இலங்கை செய்த தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.