30 வருட கால யுத்தத்தினால் இழப்புக்கள் மாத்திரமே மிகுதி: சந்திரிக்கா பண்டாரநாயக்க
போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளதுடன், வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் எனவும் நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
30 வருடகால யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், விசேட ஊடக அறிக்கையை வெளிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போர் என்பது வெற்றியல்ல, அது நாடு அல்லது மனித குலத்துக்கு பாரிய தோல்வியாகும். 30 வருட கால இனபோராட்டம் காரணமாக நாடு பலவற்றை இழந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாய்மார் தங்களின் பிள்ளைகளை இழந்தனர்.அதேபோல் பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்தனர்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என இன அடிப்படையில் நாம் பிளவடைந்துள்ளோம். இந்த யுத்தத்தின் காரணமாக நான் எனது கண்ணை இழந்தேன்.மேலும் பல இழப்புக்களை எதிர்க்கொண்டேன்.
இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம். பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிக்கவும்,மனங்களில் பிசாசுகளுக்கு பதிலாக கடவுளை நிலைப்படுத்தவும் ஒருவருக்கொருவர் ஆறுதலை பரிமாற்றிக் கொள்ளவும் இன்றை தினத்தில் உறுதியளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.