இலங்கை

மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில், மன்னாரிலும் (Mannar) நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

அதனடிப்படையில், மன்னாரில் இன்றைய தினம் சனிக்கிழமை (18.05.2024) காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டிலும் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையிலும்  மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடரை அருட்தந்தை நவரட்னம் ஏற்றி மாலை அணிவித்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15ஆவது ஆண்டு நினைவேந்தலையொட்டி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இனப்படுகொலை நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிய போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை. பல்வேறு விதமான ஆணைக்குழுக்கள் அனைத்தும் பயனற்று போனது. தமிழ் அரசியல்வாதிகளும் ஒழுங்கு முறையான திட்டமிட்ட தொடர் நடவடிக்கை எதையும் இனப்படுகொலை விவகாரத்தை முன்னோக்கி நகர்த்தவில்லை.

அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள், ஒடுக்கு முறைகள், தனிமனித பேச்சு சுதந்திர அடக்கு முறை, விசாரணைகள், அச்சுறுத்தல்கள், சிவில் செயற்பாட்டில் இராணுவ தலையீடு மற்றும் பௌத்த ஆக்கிரமிப்பு போன்றவற்றை மேற்கொள்கிறது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் எந்த மாற்றத்தையும், ஏற்றத்தையும், ஏற்படுத்தவில்லை. மாறாக தொடர்ந்து வலியையே ஏற்படுத்தி வருகிறது.

நீதி போதிக்கும் சம தர்மம் மனித உரிமை வாழ்வியல் உரிமை என உச்சரிக்கும் அநீதிக்கு துணை போகும் நீதி இல்லா நாதியற்ற போலி கனவான்களே, இனியாவது உங்கள் ஏமாற்று வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இந்த உலகம் இனியும் உங்களை நம்ப தயார் இல்லை. 15 ஆண்டுகளில் உங்கள் ஏமாற்று வித்தைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்புகள் நன்கு உணர்ந்து விட்டன.

ஆகவே எமக்குள் நாம் பேதங்களை கடந்து இனத்துவ, மொழித்துவ, வாழ்வியல், சுயநிர்ணய உரித்துக்களை பெற ஒருமித்து ஒருங்கிணைவதே ஒரே வழி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.