இந்தியா

விடுதலைப் புலிகள் மீதான தடை அநீதியானது – உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. அதற்குரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறித்துள்ளது.

“2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித் திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயல்படுகிறது. அனைத்துத் தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.”

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுவதின் மூலம் அதை மெய்யாக்கிவிடும் முயற்சியில் கடந்தகாலங்களில் பதவியிலிருந்த இந்திய அரசுகளும், இப்போது பதவியில் இருக்கும் இந்திய அரசும் செயல்பட்டு வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதி மட்டுமே அடங்கிய தமிழீழ கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி போன்ற அறவழிப் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகளும், ஆயுதப் போராட்டம் நடத்திய போராளிகள் அமைப்புகளும் முன்வைத்தனவே தவிர, ஒருபோதும் இந்தியாவில் உள்ள எந்த பகுதியின் மீது அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, இறையாண்மைக்கோ எதிராக ஒருபோதும் விடுதலைப்புலிகள் செயல்பட்டதில்லை. மேலும் இந்தியாவின் பகை நாடுகளுடன் எந்த வகையான உறவையும் விடுதலைப்புலிகள் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிங்கள அரசு இந்தியாவின் பகை நாடுகளுடன் நெருங்கி உறவாடி, அந்நாடுகள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான தளங்களை அமைப்பதற்குத் துணையாக நிற்கிறது என்ற உண்மையைக்கூட இந்திய அரசு எண்ணிப்பார்க்க தவறிவிட்டது.

இந்த உண்மையை உணர்ந்திருந்த காரணத்தினால்தான் இந்தியத் தலைமையமைச்சராக இந்திராகாந்தி அவர்கள் இருந்தபோது, சிங்கள அரசுக்கும், ஈழத் தமிழர் தலைவர்களுக்குமிடையே  பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாண இந்தியாவின் சிறப்புத் தூதுவராக ஜி. பார்த்தசாரதி அவர்களை அனுப்பினார்

அந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை செயல்படுத்தாமல் சிங்கள அரசு காலம் கடத்தி ஏமாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, ஈழப் போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து இந்திய இராணுவ முகாம்களிலேயே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, ஆயுதங்களும் வழங்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பித் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த உண்மையைச் சிறிதும் உணராமல் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி சிங்கள அரசுடன் உடன்பாடு செய்து, அதன்படி போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கு இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பினார் என்பதும், அந்த உடன்பாடு படுதோல்வியடைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே ஆகும்.

1991ஆம் ஆண்டில் இராசீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தப்பட்டு அவர்களின் இயக்கத்திற்கு முதல் தடை விதிக்கப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

இராசீவ்காந்தியின் கொலை மற்றும் அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதித்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசினால் நீதிபதி ஜெயின் ஆணையம் அமைக்கப்பட்டது. இராசீவ் கொலையைப் பற்றி விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் செய்த தவறுகளை ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்ல, சந்திராசாமி உள்பட 21 நபர்கள் குறித்து தனது ஐயப்பாடுகளை பதிவு செய்து அவர்களையும் விசாரிக்கவேண்டும் என்றும் கூறியது.

தலைமையமைச்சராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம், தலைமையமைச்சராக வாஜ்பாய் பொறுப்பேற்றப் பிறகு அவரின் அரசிடம் ஜெயின் ஆணையம் தனது இறுதி அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டதற்கிணங்க இராசீவ் கொலைப் பற்றி மீண்டும் முழுமையான புலனாய்வு செய்வதற்காக 1998ஆம் ஆண்டு பல்நோக்குப் புலனாய்வுக் குழு ஒன்றினை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி அமைத்தார்.

பல்நோக்கு விசாரணைக்குழு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது புலனாய்வை இறுதி செய்து அறிக்கை அளிக்கத் தவறிவிட்டது. ஜெயின் ஆணையம் சுட்டிக்காட்டிய நபர்கள் யாரையும் தனது விசாரணை வளையத்திற்குள் பல்நோக்கு விசாரணைக்குழு கொண்டுவந்து விசாரிக்கவே இல்லை. காலம் கடத்திய இந்த புலனாய்வுக் குழு இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது.

இராசீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேர்களும் 31 ஆண்டு கால சட்டபோராட்டத்திற்குப் பின்னால் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் எனக் கூறுவதைவிட, தப்பிக்க விடப்பட்டார்கள் என்று கூறுவதே சரியானதாகும்.

இராசீவ் கொலையைக் காரணமாகக் காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்குப் புலனாய்வுக் குழு 20 ஆண்டு காலமாக யாரையும் கைது செய்யாமல் காலங் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடையை நீடிப்பது எந்த வகையிலும் நீதியின்பால் பட்டதல்ல. அநீதியான இந்தத் தடை விதிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.