மம்தா, போலீஸ் தவிர எல்லோரும் பார்க்கலாம்! மே.வங்க கவர்னர் ‘சிசிடிவி’ ஷோ
கோல்கட்டா, மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், கவர்னர் மாளிகையில் சம்பவத்தன்று பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள், நேற்று பொதுமக்கள் 100 பேருக்கு காண்பிக்கப்பட்டன.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக உள்ள ஆனந்த போஸ் மீது, கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அளிக்கும்படியும் கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என, கவர்னர் ஆனந்த போஸ் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்க, கவர்னர் மாளிகை கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொதுமக்களிடம் காண்பிக்க, கவர்னர் ஆனந்த போஸ் முடிவு செய்திருந்தார்.
இதன்படி, கவர்னர் மாளிகையில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் 100 பேருக்கு, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மே 2ம் தேதி மாலை 5:30 மணி முதல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.
முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க போலீசார் தவிர யார் வேண்டுமானாலும் ‘சிசிடிவி’யில் பதிவான காட்சிகளை காணலாம் என கவர்னர் போஸ் தெரிவித்துள்ளார். அதை காண விரும்புபவர்கள், adcrajbhavankolkatagmail.com அல்லது governor-wbnic.in என்ற முகவரிக்கு இ – மெயில் அனுப்பலாம் அல்லது 033- 2200 1641 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என, கவர்னர் மாளிகை அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.